இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடர் போன்று பாகிஸ்தானில் பிஎஸ்எல் கிரிக்கெட் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பத்தாவது போட்டியில் லாகூர் குவாலண்டர்ஸ் அணியும், கராச்சி கிங்ஸ் அணிகளும் மோதின.
லாகூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி பேட்டிங்கைத் தொடங்கிய லாகூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பகர் ஜமான் 6 ரன்களில் ஆட்டம் இழந்தாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஃபர்கான் அதிரடியாக விளையாடி 45 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர் என 72 ரன்களைக் குவித்தார்.
பின்னால் வந்த வீரர்கள் துரிதமாக ரன்களைச் சேகரிக்க, இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஜார்ஜ் லின்டே 13 பந்துகளில் மூன்று பவுண்டரி, ஒரு சிக்சர் என 26 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதனால் லாகூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்திருந்தது.
கராச்சி அணித்தரப்பில் ஹம்சா, ஹசன் அலி மற்றும் சம்சி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். பின்னர் 176 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் கராச்சி கிங்ஸ் அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் மசூத் 10 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளிக்க, பின்னால் வந்த இரு வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் 27 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து கராச்சி அணி தத்தளித்தது.
பின்னர் ஜோடி சேர்ந்த அனுபவ வீரர்களான சோயப் மாலிக் மற்றும் கிரண் பொல்லார்டு ஆகியோர் விக்கெட் சரிவினைத் தடுத்து நிறுத்தி கராச்சி அணி ஸ்கோர் முன்னிலை பெற உதவினர். பின்னர் சோயப் மாலிக் 39 ரன்களில் ஆட்டம் இழந்தார். பின்னர் பின்னால் பேட்டிங் செய்ய வந்த வீரர்களின் உதவியுடன் பொல்லார்ட் நிலைத்து நின்று விளையாடி 33 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஐந்து சிக்ஸர்கள் என விளாசி 58 ரன்கள் குவித்து கராச்சி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
இதனால் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் கராச்சி கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. பந்துவீச்சில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லாகூர் அணியின் சாஹின் ஷா அப்ரிடி நான்கு ஓவர்களில் 34 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றினார். 58 ரன்கள் குவித்து கராச்சி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பொல்லார்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார். இப்போட்டியின் மூலம் தான் பிட்டாக இருப்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார். இந்த அதிரடியான இன்னிங்ஸ் மூலம் சமீபத்தில் ஐபில்லில் மும்பை அணியில் இருந்து ஓய்வு பெற்ற பொல்லார்டின் ரசிகர்களுக்கு இது ஏமாற்றமாக அமைந்துள்ளது.
KIER🔛 🔥🔥
— PakistanSuperLeague (@thePSLt20) February 24, 2024
Pollard is not stopping! 💥#HBLPSL9 | #KhulKeKhel | #LQvKK pic.twitter.com/D3uQHQd4Qo
கராச்சி கிங்ஸ் அணி இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மூன்று போட்டிகளில் இரு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. நான்கு போட்டிகளில் விளையாடி நான்கிலும் தோல்வியை தழுவிய லாகூர் அணி கடைசி இடத்தில் நீடிக்கிறது.