இந்த ஆடுகளம் விளையாடுவதற்கு மிகவும் கடினமானதா? – புஜாரா தெளிவான பதில்!

0
665
Pujara

2023 பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இரண்டாவது போட்டி இந்திய அணியின் இரண்டாவது சுவர் என்று வர்ணிக்கப்படும் சௌராஷ்டிரா வீரரான புஜாராவுக்கு நூறாவது டெஸ்ட் போட்டி ஆகும்!

இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ரன்கள் ஏதும் அவர் எடுக்கவில்லை, ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டம் இழக்காமல் 31 ரன்கள் எடுத்து வெற்றிக்கான ரன்னை அடித்து களத்தில் நின்று இந்திய அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

- Advertisement -

இன்று இவர் தனது நூறாவது டெஸ்டில் விளையாடும் பொழுது இவரது மாநில அணியான சவுராஷ்டிரா அணி இந்திய உள்நாட்டின் மிகப்பெரிய டெஸ்ட் தொடரான ரஞ்சி டிராபி பைனலில் பெங்கால் அணியை எதிர்த்து விளையாடியது. இந்த இறுதிப் போட்டியில் சௌராஷ்டிரா அணி ஒன்பது விக்கட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ரஞ்சி சாம்பியன் ஆனது. முதல் இன்னிங்ஸில் மூன்று விக்கட்டுகள் இரண்டாவது இன்னிங்சில் ஆறு விக்கட்டுகள் வீழ்த்திய அந்த அணியின் கேப்டன் ஜெயதேவ் உனட்கட் ஆட்டநாயகன் விருதை வென்றார்!

இந்திய அணி இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்ற பின் பேசிய புஜாரா
“இது ஒரு சிறந்த டெஸ்ட் போட்டி. துரதிஷ்டவசமாக முதல் இன்னிங்ஸில் நான் ரன் எடுக்கவில்லை. ஆனால் முதல் பத்து நிமிடங்கள் நான் களத்தில் நின்று விட்டால் என்னால் ரன்கள் எடுக்க முடியும் என்று எனக்குத் தெரியும். எனது முழு குடும்பமும் மைதானத்தில் இருந்தது. ஒரு சிறப்பான உணர்வு அதனால் கொஞ்சம் பதட்டமும் இருந்தது. மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். வெற்றிக்கான ரன்னை அடிப்பது ஒரு சிறப்பான உணர்வு!” என்று தெரிவித்துள்ளார்!

ரஞ்சி இறுதிப் போட்டியில் சௌராஷ்டிரா அணி வெற்றி பெற்று சாம்பியன் ஆனது குறித்து கூறிய அவர் “தோழர்களுக்கு வாழ்த்துக்கள். நான் மதிய உணவு இடைவேளை வரை அந்தப் போட்டியில் ஸ்கோர் என்ன என்பதை தெரிந்து கொண்டிருந்தேன். இது சிறந்த சாதனை. சில ஆண்டுகளாக நாங்கள் நல்ல செயல்பாட்டில் நிலையாக இருந்து வருகிறோம். கடந்த நான்கு வருடங்களில் இது எங்களுக்கு இரண்டாவது சாம்பியன் பட்டம். இது மிகச்சிறந்த வேலை!” என்று கூறியுள்ளார்!

- Advertisement -

இரண்டாவது டெஸ்ட் போட்டியை பற்றி பேசிய அவர் ” நாங்கள் 200-250 ரண்களை துரத்த வேண்டி வரும் என்று நினைத்திருந்தோம். எனவே நாங்கள் அந்த ரன்களுக்கு தயாராகி விட்டோம். நேற்றைய பந்துவீச்சில் நாங்கள் ஏமாற்றம் அடைந்தோம். கொஞ்சம் நிறைய ரன்களை விட்டு தந்து விட்டோம். ஆனால் இன்று எங்களது பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள். குறைந்த பவுன்ஸ் காரணமாக ஸ்வீப் ஷாட் விளையாடுவது சரியானது அல்ல. ஆனால் நான் அதற்கு நிறைய பயிற்சி செய்து இருக்கிறேன். நான் என் கால்களை பயன்படுத்தி விளையாட விரும்புகிறேன். இப்படியான டர்னிங் விக்கெட்டுகளில் அப்படி ஆடுவது தான் சரியானது!” என்று கூறினார்!

மேலும் ஆடுகளும் விளையாடுவதற்கு கடினமானதா என்று கேட்கப்பட்டதற்கு பதில் அளித்த புஜாரா ” நீங்கள் விளையாட ஆடுகளத்திற்கு வந்ததும், ஆடுகளத்தில் வேகம் எப்படி இருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். சில பந்துகள் சுழன்றும் சில பந்துகள் நேராகவும் சென்றன. இப்படி இருக்கும் பொழுது நீங்கள் உள்ளே வந்து 30, 35 பந்துகளை சந்தித்து இவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்து பந்துகள் கொஞ்சம் மென்மையுடைய ஆரம்பித்ததும் நீங்கள் நம்பிக்கையுடன் ஷாட்கள் விளையாடும் சூழ்நிலையை பெறுவீர்கள்” என்று கூறியுள்ளார்!