ஐபிஎல்-லை வைத்து தினேஷ் கார்த்திக்கை எடுத்தால்; இவரை மட்டும் ஏன் எடுக்கவில்லை? – பார்த்திவ் படேல்

0
2528
Parthiv patel

இன்றைய கிரிக்கெட் உலகில் மிக அபாயகரமான பாஸ்ட் பவுலர் என்றால் அது மொகும்மத் ஷமிதான். அவரது அப்-ரைட் ஸீம் பாஸ்ட் பவுலிங் பல பேட்ஸ்மேன்களின் தூக்கத்தைக் கெடுப்பதாக இருக்கிறது. இதெல்லாம் சிவப்புப்பந்து டெஸ்ட் போட்டிகளில் இருக்க, வெள்ளைப்பந்து போட்டிகளில் அவரது பந்துவீச்சு கொஞ்சம் ரன்களை கசியவிடுவதாகவே இருந்தது!

கடந்த ஆண்டு யு.ஏ.இ-ல் நடந்த டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானின் பாபர் ஆசமும், மொகம்மத் ரிஸ்வானும் ஷமியின் பந்துவீச்சை நொறுக்கி விட்டார்கள். இதற்குப் பிறகு அவரது வெள்ளைப்பந்து கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டதாகவே பலரும் கருத்துக் கூறினார்கள். குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் இனி அவர் இந்திய அணிக்காக விளையாட முடியாதென்று பலரும் உறுதியாக நம்பினார்கள்.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்குப் புதிதாக வந்த குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான, இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெக்ரா முகம்மத் ஷமியை அதிகம் நம்பினார். கடந்த முறை பஞ்சாப் அணியால் 4.80 கோடிக்கு வாங்கப்பட்ட முகம்மத் ஷமியை 6.25 கோடி கொடுத்து, பெங்களூர் அணியோடு ஏலத்தில் இறுதி வரை மோதி வாங்கினார் ஆசிஷ் நெக்ரா. மேலும் போட்டிகளுக்கு முன்பாகவே முகம்மத் ஷமியின் திறமையின் மேல் அவருக்கு இருந்த நம்பிக்கையையும் வெளிப்படுத்தி வந்தார்!

இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக களமிறங்கிய மொகம்மத் ஷமி ஆசிஷ் நெக்ராவின் நம்பிக்கையைக் காப்பாற்றியதோடு, அப்-ரைட் ஸீம் பந்துவீச்சில் பேட்ஸ்மேன்களை அலற விட்டார் என்றே கூறலாம். புதுப்பந்தை வைத்து பேட்ஸ்மேன்களை கிரிஸீல் நடனமாடவிட்டார். அவரது பந்தை கணிக்க முடியாமல் பேட்ஸ்மேன்கள் நிலை தடுமாறிப் போனார்கள். மொத்தம் 16 போட்டிகளில் 20 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். வரும் செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் துவங்க இருக்கும் டி20 உலகக்கோப்பையில் முகம்மத் ஷமியை சேர்க்க வேண்டுமென்று ஆசிஷ் நெக்ரா அழுத்தி வலியுறுத்தியும் இருந்தார். ஆனால் முகம்மத் ஷமி டி20 போட்டிகளில் இந்திய அணியில் இருந்து தவிர்க்கப்பட்டு வருகிறார். மேலும் ஹர்சல் படேலும் தவிர்க்கப்படுகிறார்!

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் பார்த்திவ் படேல் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் “புவனேஷ்வர் குமார் புதுப்பந்தில் முதலில் இரண்டு ஓவர்கள் வீசுவார். பும்ரா, அர்ஷ்தீப்பும் இருக்கிறார்கள். ஆனால் புதுப்பந்து பந்துவீச்சாளராக மொகம்மத் ஷமியை ஏன் பார்க்கவில்லை என்பது என்னைக் குழப்புகிறது? ஹர்சல் படேலும் வியக்கத்தக்க வகையில் செயல்பட்டார். தினேஷ் கார்த்திக் ஐபிஎல் செயல்திறனை வைத்தே தேர்வு செய்யப்பட்டார். மொகம்மத் ஷமியும் ஐபிஎல்-ல் மிகச்சிறப்பாகச் செயல்பட்டார். ஆனால் அவரை ஏன் தேர்வு செய்யவில்லை? ” என்று கேள்வி எழுப்பினார்!

மேலும் பேசிய அவர் “கடந்த டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு புவனேஷ்வர் குமார், மொகம்மத் ஷமி இருவருமே தங்கள் பந்துவீச்சை மேம்படுத்தி இருக்கிறார்கள். ஷமி புதிய பந்தில் நன்றாகவே செயல்படுகிறார். ஆனால் இறுதி ஓவர்களில் அவர் சரியாகச் செயல்படவில்லைதான்” என்றும் தெரிவித்திருக்கிறார்!