இந்திய ஸ்பின்னர்களை விட பாகிஸ்தான் ஸ்பின்னர்கள்தான் திறமையானவர்கள் – பாகிஸ்தான் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் சர்ச்சை கருத்து!

0
185
Jadeja

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு பிசன் சிங் பேடி, எரப்பள்ளி பிரசன்னா, சுபாஷ் குப்தா, பகவத் சந்திரசேகர், திலீப் ஜோஸி, வினு மன்கட், நரேந்திர ஹிர்வானி, ஸ்ரீனிவாஸ் வெங்கட்ராகவன் எனத் தொடங்கி மிகப்பெரிய சுழற் பந்துவீச்சு பாரம்பரியம் இருக்கிறது!

இதற்கு அடுத்து அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் என மிகப்பெரிய வெற்றி சரித்திரங்கள் சுழற்பந்து வீச்சில் இந்திய அணிக்கு இருக்கிறது. இதில் அனில் கும்ப்ளே டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் கைப்பற்றியவராகவும், ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றியவராகவும் இந்திய அணிக்கு இருக்கிறார்.

- Advertisement -

இவர்களுக்குப் பிறகு வலது கை சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின், இடது கை சுழற் பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா இருவரும் சுழற்பந்து வீச்சுத் துறையில் இந்திய அணிக்கு சிவப்பு பந்தில் மிக முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். ரவிச்சந்திரன் அஸ்வின் கும்பளேவுக்கு அடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராக இருக்கிறார்.

தற்சமயம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவில் நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 31 வது ஐந்தாவது விக்கட்டை கைப்பற்றி இரண்டு டெஸ்ட் போட்டியில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இன்னொரு பக்கத்தில் ரவீந்திர ஜடேஜா இரண்டாவது டெஸ்டில் 42 ரன்களுக்கு 7 விக்கட்டை வீழ்த்தி தனது சிறந்த டெஸ்ட் பந்துவீச்சை பதிவு செய்ததோடு, மொத்தமாக தற்போது மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து ஐந்து இன்னிங்ஸில் 22 விக்கட்டுகளை வீழ்த்தி, இந்தத் தொடரில் முன்னிலையில் இருக்கிறார்.

இந்த நிலையில் ரவீந்திர ஜடேஜா குறித்தும் தற்பொழுது இந்திய சுழற் பந்துவீச்சு துறையைக் குறித்தும் கிரிக்கெட் அணியின் முன்னாள் இடது கை சுழற் பந்து வீச்சாளர் அப்துர் ரகுமான் விவாதத்துக்குரிய முறையில் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். இவர் பாகிஸ்தான் அணிக்காக 22 டெஸ்ட் போட்டியில் 99 விக்கட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.

- Advertisement -

இவர் பேசும் பொழுது “இந்திய ஸ்பின்னர்களை விட பாகிஸ்தான் ஸ்பின்னர்கள் மிகச் சிறந்தவர்கள். தற்பொழுது சதாப்கான் மற்றும் முகமது நவாஸ் இருவரும் உண்மையில் சிறப்பானவர்கள். மேலும் இமாத் வாசிம், யாசிர் ஷா ஆகியோரும் இருக்கிறார்கள். புதிதாக அப்ரார் அகமது வந்திருக்கிறார். ஆனால் இந்தியாவில் ரவீந்திர ஜடேஜா மட்டுமே இருக்கிறார்!” என்று கூறியிருக்கிறார்!

மேலும் இவர் தொடர்ந்து கூறும் பொழுது
” ரவீந்திர ஜடேஜா அறிமுகம் ஆகும் பொழுது ஒரு சாதாரண பந்துவீச்சாளராகத்தான் இருந்தார். அவர் தோனியின் தலைமையின் கீழ் வளர்ந்தவர். அதனால்தான் தற்போது அவர் உலகத்தில் முதன்மையானவராக இருக்கிறார். இதனால் தான் அவர் டெஸ்ட் மற்றும் வெள்ளைப்பந்து போட்டிகளில் நன்றாக செயல்படுகிறார். தற்பொழுது இந்தியாவில் அவர் மட்டும்தான் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்!” என்று கூறியிருக்கிறார்!

இவர் இப்படி கூறியிருக்கும் பொழுதுதான் எட்டு வருடங்களுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட் ஐசிசி பந்துவீச்சு தரவரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். மேலும் தனது கடைசி ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருது வாங்கிய சுழற் பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ் அணியில் இடமில்லாமல் வெளியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!