இன்று பாகிஸ்தான் ராவல்பிண்டி மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் சில்வர் டக் ஆனார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. மேலும் சொந்த மண்ணில் 28 வருடங்கள் கழித்து ஒரு பிரதான சுழல் பந்துவீச்சாளர் இல்லாமல் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.
பாகிஸ்தான் அணிக்கு ஏற்பட்ட சோகம்
இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்ய வந்த பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அப்துல்லா ஷபிக் 2, கேப்டன் ஷான் மசூத் 6, பாபர் அசாம் 0 என ரன்கள் எடுத்து அடுத்தடுத்து வெளியேற பாகிஸ்தான் அணி 16 ரன்களுக்கு மூன்று முக்கிய விக்கட்டுகளை இழந்தது.
இந்த போட்டிக்கான பாகிஸ்தான் அணித்தேர்வில் நிறைய விமர்சனங்கள் பாகிஸ்தான் முன்னாள் வீரர்களால் முன்வைக்கப்பட்டது. மேலும் பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் ஆஸ்திரேலியா ஜேசன் கில்லஸ்பி அணுகுமுறை பாகிஸ்தான் முன்னாள் வீரர்களால் மிகவும் கடுமையாக கேள்விக்கு உள்ளாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாபர் அசாமின் 10 இன்னிங்ஸ் பரிதாபம்
இந்த போட்டியில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் இரண்டு பந்துகளை மட்டுமே சந்தித்து சில்வர் டக் ஆனார். முதல் பந்தில் டக் அவுட் ஆவது கோல்டன் டக் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் இது எட்டாவது டக் அவுட் ஆகும். மேலும் முதல் முறையாக பாபர் அசாம் சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் டக் அவுட் ஆகி இருக்கிறார்.
மேலும் கடந்த 10 டெஸ்ட் இன்னிங்ஸ்களாக பாபர் அசாம் இடம் இருந்து ஒரு அரை சதம் கூட வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அதிகபட்சமாக 41 ரன்கள் எடுத்திருக்கிறார். ஒற்றை இலக்கத்தில் 1 முறை ஆட்டம் இழந்து இருக்கிறார். 10 ரன்களுக்கு மேல் 2 முறை, 20 ரண்களுக்கு மேல் 4 முறை, 30 மற்றும் 40 ரன்கள் 1 முறை, மேலும் 1 டக் அவுட் என ஆகியிருக்கிறார்.
இதையும் படிங்க : கம்பீர் தேர்வு செய்த உலக லெவன்.. 3 பாகிஸ்தான் வீரர்களுக்கு இடம்.. 2 அணி புறக்கணிப்பு
சர்வதேச கிரிக்கெட்டில் பாபர் அசாமுக்கு 2023 ஆம் ஆண்டு முதல் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் பேட்டிங் ஃபார்ம் மிகவும் சுமாராக இருந்து வருகிறது. மேலும் கடந்த இரண்டு உலகக் கோப்பை தொடர்களாக பாபர் அசாம் எதிர்பார்த்ததை விட மிக மோசமாக விளையாடியிருக்கிறார். அவருடைய தனிப்பட்ட பேட்டிங் ஃபார்ம் சரிந்தது பாகிஸ்தானில் ஒட்டுமொத்த கிரிக்கெட்டையும் பாதிப்படையை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.