பாகிஸ்தான் அணி தங்களது சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று இருக்கிறது.
தற்போது நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்திருந்தது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் வெற்றி பெற்று தொடரை தற்காலிகமாக சமன் செய்திருக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு ரீசா ஹென்ட்ரிக்ஸ் 0, குயின்டன் டி காக் 7, டோனி டி சோர்சி 7, பிரிட்ஸ்கீ 5, டொனேவன் பெரேரா 15, ஜார்ஜ் லிண்டே 9, கார்பின் போஸ் 11 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள்.
தென் ஆப்பிரிக்கா அணியில் டிவால்ட் பிரிவிஸ் மட்டும் தாக்குப்பிடித்து விளையாடி 16 பந்தில் 25 ரன்கள் எடுத்தார். அந்த அணி இறுதியாக 19 புள்ளி இரண்டு ஓவரில் 110 ரன்கள் எடுத்து சுருண்டது. பாகிஸ்தான் அணியின் தரப்பில் ஃபாஹீம் அஷ்ரப் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து விளையாட வந்த பாகிஸ்தான் அணிக்கு முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 40 பந்தில் 54 ரன்கள் வந்தது. பர்கான் 23 பந்தில் 28 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதற்கு அடுத்து அதிரடியாக இரண்டாவது விக்கெட் பார்ட்னர்சிப்பாக 39 பந்தில் 58 ரன்கள் வந்தது.
இதையும் படிங்க : ஆஸி 3வது டி20.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. ஒரே கல்லில் 3 மாங்காய்.. கம்பீர் மாறியே ஆகணும்
பாகிஸ்தான் அணிக்கு சிறப்பாக விளையாடிய சையும் ஆயுப் 38 பந்தில் 6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உடன் ஆட்டம் இழக்காமல் 71 ரன்கள் எடுத்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த பாபர் அசாம் 18 பந்தில் 11 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி இலக்கை 13.1 ஓவரில் எட்டி ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.