இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி கிரிக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தற்போது பாகிஸ்தான அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
வேகத்தில் மிரட்டிய ஹாரிஸ் ரவுப்
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் மேத்யூ ஷார்ட் 15 பந்தில் 19 ரன்கள், ஜாக் பிரேசர் மெக்கர்க் 10 பந்தில் 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதைத் தொடர்ந்து வந்த நட்சத்திர ஆட்டக்காரர் ஸ்மித் 48 பந்துகள் விளையாடி 35 ரன்கள் எடுத்தார்.
இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா அணிக்கு அதிகபட்சமாக ஜோஸ் இங்லீஷ் 18, ஆடம் ஜாம்பா 18 ரன்கள் எடுத்தார்கள். முக்கிய பேட்ஸ்மேன்கள் லபுசேன் 6 மற்றும் மேக்ஸ்வெல் 16 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். ஆஸ்திரேலியா அணி 35 ஓவர்களில் 163 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. பாகிஸ்தான் பந்துவீச்சில் அதிவேக பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவுப் 8 ஓவர்களில் 29 ரன்னுக்கு 5 விக்கெட் கைப்பற்றினார். ஷாகின் அப்ரிடி 3 விக்கெட் வீழ்த்தினார்.
பேட்டிங்கில் கலக்கிய சையும் அயூப்
இதைத்தொடர்ந்து சிறிய இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சையும் அயூப் மற்றும் அப்துல்லா ஷபிக் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். சிறப்பாக விளையாடிய சையும் அயூப் அதிரடியாக அரைசதம் அடிக்க முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் 100 ரன்கள் கடந்தது.
இதைத்தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சையும் அயூப் 71 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர் உடன் 82 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 123 பந்துகளில் அதிரடியாக 137 ரன்கள் குவித்து வெற்றியை எளிதாக்கியது.
இதையும் படிங்க : 56/5.. மறுபடியும் சரிந்த இந்திய அணி.. மீண்டும் போராடும் துருவ் ஜுரல்.. ஆஸி ஏ அணி ஆதிக்கம்.. 2வது டெஸ்ட்
முடிவில் இன்னொரு துவக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபிக் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 69 பந்தில் 64 ரன்கள், பாபர் அசாம் 20 பந்தில் 15 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுத்தார்கள். பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 26.3 ஓவரில் இலக்கை எட்டி ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை தற்காலிகமாக சமன் செய்திருக்கிறது. மேலும் ஏழு வருடங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியா அணியை ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தான அணி வென்றிருக்கிறது.






