ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி தோல்வியை நோக்கி மிக வேகமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் துருவ் ஜூரல் பணியாளாக போராடிக் கொண்டிருக்கிறார்.
தற்போது இந்திய ஏ அணி ருதுராஜ் தலைமையில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய ஏ அணி தோல்வி அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ஏமாற்றிய இந்திய பேட்ஸ்மேன்கள்
இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணி 161 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர்கள் அபிமன்யு ஈஸ்வரன், கேஎல். ராகுல், சாய் சுதர்ஷன் ருதுராஜ், படிக்கல், நிதீஷ் குமார் ரெட்டி என எல்லோரும் ஏமாற்றம் தந்தார்கள்.
இந்திய அணியில் துருவ் ஜூரல் மட்டுமே 186 பந்துகளை சந்தித்து நிலைத்து நின்று விளையாடி 80 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா அணியின் தரப்பில் அதிவேக பந்துவீச்சாளர் நேசர் அதிரடியாக நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா ஏ அணி 233 ரன் எடுத்தது. மார்க்கஸ் ஹாரிஸ் 70 ரன் எடுத்தார். பிரசித் கிருஷ்ணா 4, முகேஷ் குமார் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.
மீண்டும் சரிந்த இந்திய அணி
இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன் 17, கேஎல்.ராகுல் 10, சாய் சுதர்ஷன் 3, கேப்டன் ருதுராஜ் 11, படிக்கல் 1 என சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்து அடுத்தடுத்து வெளியேறி மீண்டும் மீண்டும் ஏமாற்றம் கொடுத்தார்கள்.
இதையும் படிங்க : 4 பேர் சேர்ந்து சச்சின் கிட்ட என்னை அப்படி பண்ண வச்சாங்க.. அவரே ஆச்சரியம் ஆயிட்டாரு – விராட் கோலி பேட்டி
இந்திய அணி 56 ரன்கள் எடுத்து ஐந்து முக்கிய விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது. இந்த நிலையில் இன்று இரண்டாம் நாள் முடிவில் களத்தில் ஆட்டம் இழக்காமல் துருவ் ஜூரல் 19, நிதீஷ் 9 ரன்கள் எடுத்திருக்கிறார்கள். இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 31 ஓவர்களில் 73 ரன்கள் எடுத்திருக்கிறது. மேலும் 11 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. தற்போது இரண்டாவது டெஸ்டையும் இந்திய ஏ அணி தோற்கும் நிலையில்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!






