வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரது பொறுப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது.
தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்கு பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை பாகிஸ்தான் அணி இரண்டு ஒன்று என கைப்பற்றியது.
சமாளித்த வெஸ்ட் இண்டீஸ்
இதைத் தொடர்ந்து நடைபெற்ற மூன்று போட்டிகள் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் எவின் லீவிஸ் 62 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 60 ரன்கள் எடுத்தார்.
இதைத் தொடர்ந்து கேப்டன் ஷாய் ஹோப் 77 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் உடன் 55 ரன்கள் எடுத்தார். மேலும் ரோஸ்டன் சேஸ் கடைசி கட்டத்தில் 54 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 53 ரன்கள் எடுக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 280 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் பந்துவீச்சில் ஷாகின் அப்ரிடி 4, நசீம் சா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.
பாபர் ரிஸ்வான் பொறுப்பான ஆட்டம்
இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணிக்கு பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்கள் சையும் அயுப் 5, அப்துல்லா ஷபிக் 29 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு நல்ல துவக்கம் அமையவில்லை.
இதையும் படிங்க : 601 ரன்.. 3 மெகா சதங்கள்.. ஜிம்பாப்வேவை புரட்டி எடுத்த நியூசிலாந்து அணி.. அதிரடியான 2வது டெஸ்ட்
மேற்கொண்டு இணைந்த பாபர் அசாம் 64 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 47 ரன், முகமது ரிஸ்வான் 69 பந்துகளில் 4 பவுண்டரிகள் உடன் 53 ரன், ஹஸன் நவாஸ் அதிரடியாக 54 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் ஆட்டம் இழக்காமல் 63 ரன்கள் எடுக்க, பாகிஸ்தான் ணி 48.5 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நீண்ட நாட்கள் கழித்து கிரிக்கெட்டுக்கு திரும்பிய பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.






