கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியது குறித்து பாகிஸ்தான் வீராங்கனை கைநாத் இம்தியாஸ் கூறியுள்ளது

0
483
Kainat Imtiaz about Virat Kohli

சில நாட்களுக்கு முன்பு அனைத்து விதமான கேப்டன் பதவியில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு அத்தனை இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் விராட் கோலி. அதிலும் முக்கியமாக யாருமே எதிர்பாராமல் டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் பதவியில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். டி20 போட்டிகளில் இருந்து கேப்டன் பதவியை துறக்கும் போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக தொடர விருப்பம் தெரிவித்திருந்தார் கோலி. ஆனால் ஒருநாள் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் கோலி.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த கையோடு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் கேப்டன் பொறுப்பை விடுவதாக அறிவித்தார் கோலி. இதனால் பிசிசிஐ அமைப்பில் இருந்து கோலிக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக பல்வேறு தகவல்கள் வந்தன. ஆனால் இதை பிசிசிஐ முற்றிலுமாக மறுத்துள்ளது.

- Advertisement -

இந்தியாவின் சிறந்த கேப்டனாக விளங்கிய கோலி, இப்படி திடீரென்று கேப்டன் பதவியிலிருந்து விலகிக் கொண்டதால் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களைக் கூறி கோலியை புகழ்ந்து வருகின்றனர். ரசிகர்களை தாண்டி மற்ற கிரிக்கெட் வீரர்களே வரிசையாக கோலிக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். அதில் தற்போது பாகிஸ்தான் வீராங்கனை ஒருவரும் இணைந்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் வீராங்கனையான கைநட் இம்தியாஸ் ட்விட்டரில் கோலியை பாராட்டிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவருடைய டுவிட்டர் பதிவில் கோலி ஏழு ஆண்டுகள் யாருக்கும் அஞ்சாமல் கிரிக்கெட் விளையாடியதாக கூறியுள்ளார். மேலும் எல்லா காலத்திலும் அவர்தான் சிறந்த வீரர் என்று பொருள் படும் படியான GOAT என்ற சொல்லாடலையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.

அரசியல் காரணங்களாக இந்தியாவையும் பாகிஸ்தானையும் எதிரி நாடுகளை போலவே சமூகத்தில் சிலர் பாவித்து வருகின்றனர். இந்த இரு நாடுகளும் தனியாக கிரிக்கெட் தொடரில் விளையாடியே பல ஆண்டுகளாகிறது. அப்படி இருக்க பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வீராங்கனை ஒருவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலியை வெகுவாக பாராட்டி இருப்பது ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை இந்தியாவின் ரசிகர்கள் மற்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் என இரு தரப்பு ரசிகர்களும் அதிகமாக கொண்டாடி வருகின்றனர்.

- Advertisement -