மோசமான சாதனையில் இந்தியாவை காப்பாற்றிய பாகிஸ்தான்.. ஆஸி ஓபனர்ஸ் விஸ்வரூப அடி.. களைக்கட்டும் உலக கோப்பை!

0
817
Australia

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் முக்கியமான போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் பாகிஸ்தான் அணியும் பெங்களூர் மைதானத்தில் மோதிக் கொண்டு வருகின்றன.

இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி பந்து வீசுவது என தீர்மானித்தது. பெங்களூர் மைதானத்தில் சுழற் பந்து வீச்சு கொஞ்சம் எடுபட்டாலும் கூட, மைதானம் சிறியது என்பதால் ரன் மழை நிச்சயம் இருக்கும்.

- Advertisement -

இந்த போட்டிக்கு ஆஸ்திரேலியா அணியில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை. அதே சமயத்தில் பாகிஸ்தான் அணியில் துணை கேப்டன் சதாப் கான் நீக்கப்பட்டு அவருடைய இடத்தில் சுழற் பந்துவீச்சாளர் உசாமா மிர் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் மிட்சல் மார்ஸ் இருவரும் வந்தார்கள். ஆரம்பத்தில் ஓவர்களில் மெதுவாக ஆரம்பித்த அவர்கள் அதற்கு பிறகு தங்களுடைய விஸ்வரூபத்தை காட்டினார்கள்.

இந்த நிலையில் ஷாகின் சா அப்ரிடி பந்துவீச்சில் 10 ரன்கள் எடுத்திருந்தபோது டேவிட் வார்னர் தந்த எளிய கேட்சை இன்று விளையாட வாய்ப்பு பெற்ற உசாமா மிர் தவற விட்டு அதிர்ச்சி அளித்தார்.

- Advertisement -

இந்த ஜோடி பத்து ஓவர்களுக்கு விக்கெட் இழப்பில்லாமல் 82 ரன்கள் சேர்த்து அசத்தியது. இருவரும் சேர்ந்து பவர் பிளேவில் 10 ஓவரில் 10 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் விளாசி அசத்தினார்கள். ஹாரிஸ் ரவுஃப் வீசிய ஆட்டத்தின் ஒன்பதாவது ஓவரில் 24 ரன்கள் அடித்து நொறுக்கி ஆஸ்திரேலியா துவக்க ஆட்டக்காரர்கள் ஆச்சரியப்படுத்தினார்கள்.

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலியா அணிக்கு முதல் பத்து ஓவர்களில் கிடைத்த அதிகபட்ச ரன்களாக இது பதிவாகி இருக்கிறது.

இதற்கு முன்பாக 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக 80/0 ரன்கள் எடுத்திருந்தது ஆஸ்திரேலிய அணிக்கு இந்த வகையில் அதிகபட்ச ரன்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணி தற்போது சிறிய மைதானத்தில் ஆஸ்திரேலியா அணியின் துவக்க ஆட்டக்காரர்களை வீழ்த்த முடியாமல், அவர்களிடம் சிக்கிக் கொண்டிருக்கிறது. இருவரும் 25 ஓவர்கள் விளையாடினார்கள் என்றால் பாகிஸ்தான் வெற்றி என்பது அந்த இடத்திலேயே முடிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது!