பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அதிரடியான ஆட்டத்தால் நியூசிலாந்து அணி ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தத் தொடரை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா பாகிஸ்தான் அணியின் சீனியர் வீரர்கள் மீது தனது விமர்சனத்தை மறைமுகமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
பாக் நியூசி டி20 தொடர்
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மோசமான தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி, அதற்கு பிறகு நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் கொண்டு ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் இரண்டு போட்டிகளிலும் மோசமான தோல்வி சந்தித்தது. இருப்பினும் மனம் தளராத பாகிஸ்தான் அணி இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நியூசிலாந்து அணி பாகிஸ்தான் அணிக்கு 204 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்தாலும் இளம் அணி அதிரடியாக விளையாடியது.
தொடக்க ஆட்டக்காரர் முகமது ஹாரிஸ் 20 பந்துகளில் 41 ரன்கள் குவித்து வெளியேற, மற்றொரு தொடக்க வீரர் ஹாசன் நவாஸ் 45 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 105 ரன்கள் குவித்து தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும் கேப்டன் சல்மான் ஆகா 31 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். இது டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் புதிய பரிணாமத்தை வெளிப்படுத்துகிறது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி இப்போதுள்ள அணி தனிப்பட்ட ரன்களுக்காக விளையாடாமல் வெற்றி பெறுவதற்காக விளையாடுகிறார்கள் என்று முன்னாள் வீரர்களான பாபர் அசாம் முகமது ரிஸ்வானை விமர்சித்திருக்கிறார்.
சல்மான் அலி விமர்சனம்
இதுகுறித்து அவர் கூறும் போது “என் பசங்க வெறும் எண்களை மட்டுமே உருவாக்குவதற்காக இங்கு இல்லை. இது ஒரு அனுபவமற்ற அணியாக இருந்தாலும், நீங்கள் இவர்களை ஆதரித்தால் ஒரு வெற்றிகரமான அணியாக உருவாகும். நீங்கள் அவர்களுக்கு தேவையான ஆதரவை வழங்கினால் இது நிச்சயமாக உங்கள் அணியாக மாறும். பாகிஸ்தான் அணியின் வளர்ச்சிக்கு இந்த வெற்றியை மிகவும் அவசியமானதாகும். இந்த தொடரை உயிர்ப்புடன் வைத்திருக்க இந்த வெற்றி மிகவும் அவசியம். ஹசன் மற்றும் ஹாரிஸ் மிகச் சிறப்பாக விளையாடினார்கள்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:என்ன நியாயம் இது.. ஏலத்துக்கு வர்றீங்க.. அப்புறம் பாதியில போனா பிசிசிஐ ஏத்துக்குமா?. இங்கி வீரரை விமர்சிக்கும் வாகன்
கடந்த டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி, சிறிய அணிகளிடமே மோசமான தோல்வியை சந்தித்து வெளியேறியது. அதற்கு காரணமாக சீனியர் வீரர்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் தனிப்பட்ட சாதனைகளுக்காக மெதுவாக விளையாடுவதால் அது அணியின் நலனை பாதிக்கிறது என்ற விமர்சனம் இருந்த நிலையில் தற்போதைய டி20 கேப்டன் சல்மான் அலி, அவர்களை மறைமுகமாக தாக்கி பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






