பாகிஸ்தான் அரதப்பழசான கிரிக்கெட்டை விளையாடுது; ஆனால்? – தமிழக வீரர் அபினவ் முகுந்த் அலசல்!

0
1480
Abinav mukundh

நியூசிலாந்து பாகிஸ்தான் பங்களாதேஷ் மூன்று அணிகள் நியூசிலாந்தில் முத்தரப்பு டி20 தொடரில் மோதி வந்தன. இந்த தொடரின் இறுதிப் போட்டி என்று நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிறைஸ்ட்சர்ச் நகரில் நடந்தது!

இந்த போட்டிக்கான டாசில் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார். நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 38 பந்துகளில் 59 ரன்களை 4 பவுண்டரி 2 சிக்சருடன் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இதையடுத்து களம் கண்ட பாகிஸ்தான் அணிக்கு பேட்டிங்கில் முதுகெலும்பாக விளங்கும் பாபர் மற்றும் ரிஸ்வான் இருவரும் 15 மற்றும் 34 ரன்களில் வெளியேறினார்கள். வழக்கமாக தடுமாறும் பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் இந்த இறுதிப்போட்டியில் முதல்முறையாக குறிப்பிடும்படியாக விளையாடியது. ஷான் மசூத் 19, மோகமத் நவாஸ் 38, ஹைதர் அலி 31, இப்திகார் அகமத் 25 ரன்கள் எடுக்க பாகிஸ்தான் அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்று, முத்தரப்பு தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

பாபர் மற்றும் ரிஸ்வான் பெரிய அளவில் விளையாடாத இந்தப்போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது குறித்தும், பாகிஸ்தான் அணி விளையாடி வரும் வழக்கமான கிரிக்கெட் பாணி குறித்தும், இவர்கள் எப்படியான அணியாக இருப்பார்கள் என்பது குறித்தும், பிரபல தமிழக மற்றும் முன்னாள் இந்திய வீரர் அபினவ் முகுந்த் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறும்போது “இறுதியாக பாகிஸ்தான் அணியின் புகழ்பெற்ற துவக்க ஆட்டக்காரர்கள் சரியாக விளையாடாத ஒரு போட்டியில், பாகிஸ்தான் மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடி வெற்றி பெற்றிருக்கிறார்கள். இது அவர்களுக்கு நல்லதா கெட்டதா என்று என்னால் சரியாக யூகிக்க முடியவில்லை. பாகிஸ்தான் அணியினர் டி20 கிரிக்கெட்டில் பழைய கிரிக்கெட் விளையாட்டு முறையில் சிக்கிக்கொண்டார்கள். அது பல முறை தோல்வியடைந்த கிரிக்கெட் பிராண்ட். கையில் விக்கெட்டை வைத்துக்கொண்டு பின்பு தாக்கி ஆடலாம் என்பது பல நேரங்களில் பலனளிக்காமல் போகும். ஆனால் பாகிஸ்தான் அணிக்கு எதிராக எல்லோரும் 200 ரன்களை எளிதாக அடித்து விட முடியாது. அவர்களிடம் நல்ல பந்து வீச்சு தாக்குதல் இருக்கிறது. எனவே அவர்களுக்கு 160 முதல் 170 ரன்கள் சரியாகவே இருக்கும் ” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அபினவ் முகுந்த் ” பாகிஸ்தான் அணி ஒரு ஆபத்தான அணி. ஆனால் அவர்கள் விளையாடும் கிரிக்கெட் முறை காலாவதியானதா இல்லையா என்று காலம் தான் பதில் சொல்லும். விக்கெட்டை கைவசம் வைத்துக்கொண்டு பின்னால் அடிக்கலாம் என்று ஆடும் இந்த ஆட்டமுறை ஆடும் அணிக்கு ஆபத்தானது. ஆனால் அவர்களின் பந்துவீச்சு பலத்தால் இதை ஈடு கட்டிக் கொள்ள முடியும். பாகிஸ்தான் அணி தனது பாணியை மாற்றுவது சந்தேகம்தான் ” என்று கூறியிருக்கிறார்!