இந்தியா கிரிக்கெட்ல வேற லெவல்ல இருக்கு – பாகிஸ்தான் கம்ரன் அக்மல்!

0
434
Kamran Akmal

உலக கிரிக்கெட்டை கட்டுப்படுத்தும் ஒரு மிகப்பெரிய சக்தியாக இந்திய கிரிக்கெட் வாரியம் தற்காலத்தில் உருவாகியிருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணம் இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு இருக்கும் பெரிய அளவிலான ரசிகர் கூட்டம்தான்!

இந்தியாவை உலகின் மிகப்பெரிய சந்தை என்று கூறுவார்கள். கிரிக்கெட்டுக்கும் இந்தியா மிகப்பெரிய சந்தையாக இருக்கிறது. இதனால் இந்திய கிரிக்கெட் வாரியம் உலக கிரிக்கெட் வாரியங்களில் அதிக வருவாய் ஈட்டும் வாரியமாக இருக்கிறது!

- Advertisement -

இது மட்டும் அல்லாமல் உலக கிரிக்கெட்டில் 20 ஓவர் கிரிக்கெட் அறிமுகமாக, அதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இருந்த வரவேற்பை மிக புத்திசாலித்தனமாக இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தொடர் மூலம் பயன்படுத்திக்கொண்டது.

ஐபிஎல் தொடர் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியம் மிகப்பெரிய வருவாயை ஈட்டுகிறது. இந்தத் தொடரில் கொட்டும் கோடிகள் உலக கிரிக்கெட்டை இந்தியா கட்டுப்படுத்த காரணமாக இருக்கிறது. ஐபிஎல் தொடர் காலத்தில் உலக கிரிக்கெட் நாடுகள் தங்களின் சர்வதேச போட்டி அட்டவணையை மாற்றி அமைக்கும் அளவுக்கு நிலைமை உள்ளது.

இந்தியாவைப் பார்த்து மற்ற நாடுகளும் உரிமையாளர் டி20 தொடர்களை நடத்த ஆரம்பித்தனர். தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இன்னும் ஒருபடி மேலே போய் தங்கள் நாட்டின் உரிமையாளர் டி20 தொடரை நடத்த ஐபிஎல் உரிமையாளர்களை அழைத்து அணிகளை விற்றது.

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டுக்கு இருக்கும் மிகப்பெரிய வரவேற்பால் இந்திய அணி அதிக போட்டிகளில் பங்குபெறும் வகையில் திட்டங்கள் வகுக்கப்படுகிறது. அதே சமயத்தில் வீரர்கள் சுழற்சி முறையில் பயன்படுத்தப்பட புதிய வீரர்களுக்கு வாய்ப்புகள் தொடர்ந்து அளிக்கப்படுகிறது. மேலும் ஒரே நேரத்தில் இந்திய இரண்டு அணிகள் இரண்டு நாடுகளில் கிரிக்கெட் விளையாடும் திட்டத்தை உருவாக்கி கொஞ்சம் கொஞ்சமாக இந்திய கிரிக்கெட் வாரியம் செயல்படுத்தி வருகிறது. இதன் முதல் நிலை திட்டம் ஷிகர் தவான் தலைமையில் ராகுல் டிராவிட் பயிற்சியில் இலங்கையில் செயல்படுத்தப்பட்டது. இதற்கடுத்து ஹர்திக் பாண்டியா தலைமையில் லட்சுமன் பயிற்சியில் அயர்லாந்தில் செயல்படுத்தப்பட்டது.

தற்பொழுது ரோகித் சர்மா தலைமையில் ராகுல் திராவிட் பயிற்சியில் ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் உலகக் கோப்பை தொடருக்கு தயாராக முன்கூட்டியே ஆஸ்திரேலியாவிற்கு ஒரு இந்திய அணி பயணப்பட்டு இருக்கிறது. அதே சமயத்தில் ஷிகர் தவான் தலைமையில் லக்ஷ்மன் பயிற்சியில் ஒரு இளம் இந்திய அணி உள்நாட்டில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

தற்போது இந்திய அணியில் இந்த அணுகுமுறையை வியந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் கமரன் அக்மல் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது ” சர்வதேச தரத்தில் இரண்டு அணிகள் தயாராக இருப்பது இந்தியாவிற்கு கிரிக்கெட்டில் மிகப்பெரிய அடையாளம். ஒரு அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக உள்நாட்டில் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இன்னொரு அணி டி20 உலகக் கோப்பையில் விளையாட ஆஸ்திரேலியாவுக்குச் சென்றிருக்கிறது” என்றவர்…

மேலும் தொடர்ந்து ” இப்படி இரண்டு அணிகள் என்பது வெள்ளைப் பந்து கிரிக்கெட் போட்டிகளுக்கு மட்டுமல்ல, டெஸ்ட் போட்டிகளுக்கும் இந்திய அணியின் இன்னொரு அணி தயாராகவே இருக்கிறது. இந்திய அணி நிர்வாகம் மிக உறுதியான கொள்கையைக் கொண்டுள்ளது. இப்படி அவர்கள் வலிமையாக இருப்பதற்கு அவர்களின் உள்நாட்டு கிரிக்கெட் அமைப்பு முறைதான் காரணம். இதற்கான அங்கீகாரம் அவர்களுக்கு வழங்க வேண்டும். இந்தியா எவ்வளவு பெரிய திறமையான கிரிக்கெட் குழுவை உருவாக்கி இருக்கிறது என்று பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது” என்று வியந்து கூறியிருக்கிறார்.