நேற்றைய போட்டியில் இந்திய அணி தங்களை முழுவதுமாக தோற்கடித்து விட்டதாக பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் வருத்தமாக கூறியிருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 127 ரன்கள் மட்டுமே 20 ஓவர்களில் எடுத்தது. இதை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 15.5 ஓவர்களில் எளிதாக இலக்கை அடைந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பெற்றது.
தோல்வியை மறைக்க முடியாது
இது குறித்து பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெசன் கூறும் பொழுது “நேற்று எங்களை விட இந்திய அணி சிறப்பாக விளையாடியது. இதை யாராலும் மறைக்க முடியாது என்று நினைக்கிறேன். நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. இதனால் 20 முதல் 30 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். இந்தியாவின் பந்து வீச்சும் மிகச் சிறப்பான முறையில் அமைந்திருந்தது”
“உங்கள் எல்லோருக்குமே தெரியும் மிடில் ஓவர்களில் எங்களை அவர்கள் அழுத்தி விட்டார்கள். நல்ல பந்து வீச்சு கொண்ட அணிக்கு எதிராக நாங்கள் இன்னும் வேலை செய்ய வேண்டி இருக்கிறது. எங்களிடம் போதுமான ஸ்கோர் இல்லை என்றால் கூட மைதானத்தில் வீரர்கள் போராடிய விதத்தில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு மிகவும் திருப்தியாக இருந்தது”
பதற்றம் அடைந்து விட்டோம்
“பேட்டிங் ஆரம்பத்தில் நாங்கள் கொஞ்சம் அவசரப்பட்டு பதட்டமாக ஆடிவிட்டோம். பந்து கொஞ்சம் ஆடுகளத்தில் நின்று வந்தது. இதை நாங்கள் முன்கூட்டியே எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் நாங்கள் இதற்கு ஏற்ற வகையில் சரியாக விளையாடவில்லை. பவர் பிளே முடியும் பொழுது நாங்கள் போட்டியில் இருந்தோம். ஆனால் பவர் பிளே முடிந்து பந்துவீச்சில் அவர்கள் முழுவதுமாக எங்களை சிக்க வைத்து விட்டார்கள்”
இதையும் படிங்க : இவரை தொடரை விட்டு தூக்கணும்.. ஐசிசி கதவைத் தட்டிய பாகிஸ்தான்.. இந்திய அணிக்கு எதிரான நடவடிக்கை
” இன்னும் மூன்று நாட்கள் கழித்து நாங்கள் மைதானத்திற்கு வரும் பொழுது பேட் மற்றும் பந்தில் இதைவிட சிறப்பாக செயல்பட வேண்டும். தற்போது எங்கள் வீரர்கள் காட்டிய முயற்சி மற்றும் மனவலிமை மகிழ்ச்சியாக இருக்கிறது. அடுத்த போட்டியில் இன்னும் கூடுதலாக வெளிப்படுத்த வேண்டி இருக்கும். நாங்கள் அதை செய்து போட்டியை வென்றால் இரண்டாவது சுற்றில் இருப்போம்” என்று கூறியிருக்கிறார்.






