துபாயில் தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வங்கதேச அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
இந்த சூழ்நிலையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை இந்திய அணிக்கு எதிரான இறுதிப் போட்டி குறித்து பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் அலி ஆகா சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
8 நாடுகள் பங்குபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. மேலும் இன்று இரவு நடைபெற உள்ள ஆட்டத்தில் இலங்கை அணிக்கு எதிராக தனது கடைசி போட்டியில் விளையாட உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வங்கதேச அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.
இந்த தொடரை பொறுத்தவரை பாகிஸ்தான் அணி இந்திய அணிக்கு எதிராக இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்தாலும் மூன்றாவது முறையாக தற்போது இறுதிப் போட்டியில் இந்திய அணியை சந்திக்க உள்ளது. இந்த சூழ்நிலையில் கடந்த இரண்டு போட்டிகளில் பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்று பழிவாங்குவோம் என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்த மாதிரியான ஆட்டங்களில் வெற்றி பெற்றால் நீங்கள் ஒரு சிறப்பு அணியாக இருக்க வேண்டும். எங்கள் அணியில் அனைவரும் சிறப்பாக முன்னேறினார்கள். இருப்பினும் பேட்டிங்கில் சில முன்னேற்றம் தற்போது தேவைப்படுகிறது. ஆனால் நாங்கள் அதற்காக கடுமையாக உழைக்கப் போகிறோம். நாங்கள் யாரையும் வெல்லக்கூடிய அணி. நாங்கள் ஞாயிற்றுக்கிழமை திரும்பி வந்து அதை செய்ய முயற்சிப்போம்.
இதையும் படிங்க:அவர் மட்டும் இருந்திருந்தா.. கருண் நாயருக்கு இங்கிலாந்து தொடருக்கே வாய்ப்பு கிடைத்திருக்காது.. உண்மையை உடைத்த தினேஷ் கார்த்திக்
மேலும் எங்கள் பந்துவீச்சாளர் சாஹின் ஒரு சிறப்பான பிளேயர். அவர் அணிக்கு தேவையானதை தொடர்ந்து சிறப்பாக கொடுத்து வருகிறார். நாங்கள் 15 ரன்கள் குறைவாக எடுத்தாலும், பந்துவீச்சில் எதிரணிக்கு தேவையான அழுத்தத்தை கொடுத்தோம். நீங்கள் பெரும்பாலும் போட்டிகளில் நன்றாக பந்து வீசினால் வெற்றிபெற வாய்ப்புகள் அதிகம். நாங்கள் நன்றாக ஃபீல்டிங் செய்து வருகிறோம். ஷேன் எங்களுக்காக கடுமையாக உழைத்து வருகிறார். நாங்கள் நன்றாக ஃபீல்டிங் செய்ய முடியாவிட்டால் அணியில் இருக்க மாட்டோம் என்று எங்கள் பயிற்சியாளர் கூறியிருக்கிறார்” என்று அவர் பேசி இருக்கிறார்.