இந்திய அணிக்கு நட்சத்திரம் பேட்ஸ்மேன் விராட் கோலி நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். இந்த நிலையில் அவரது பேட்டிங் குறித்து பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் பாராட்டி பேசி இருக்கிறார்.
நடப்பு சாம்பியன் டிராபி தொடரில் நேற்று துபாய் மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி கொண்ட போட்டி நடைபெற்றது. இதில் அனைத்து துறைகளிலும் மிகச் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு 99 சதவீதம் தகுதி பெற்றது.
திரும்பி வந்த விராட் கோலி
இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு சுற்றுப்பயணம் செய்திருந்தது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதம் அடித்திருந்தபொழுதும் அதற்குப் பிறகு ஒரே முறையில் ஆட்டம் இழந்து மிகப்பெரிய ஏமாற்றத்தை இந்திய அணி நிர்வாகத்திற்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் கொடுத்தார். இதன் காரணமாக அவரது பார்ம் குறித்த கேள்விகள் இருந்து வந்தது.
இப்படியான நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக உள்நாட்டில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் அரை சதம் அடித்திருந்தார். அதே சமயத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக சாம்பியன்ஸ் டிராபியில் சீக்கிரம் ஆட்டம் இழந்திருந்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் கில் மற்றும் ரோஹித் சர்மா கொஞ்சம் சீக்கிரத்தில் வெளியேறி இருந்த நிலையில் விராட் கோலி மீண்டும் தனது பழைய ஆட்டத்தை கொண்டு வந்து சதம் அடித்து தன்னுடைய இருப்பை காட்டி இருக்கிறார்.
எங்களால் தடுக்க முடியவில்லை
விராட் கோலி பேட்டிங் குறித்து பேசி இருக்கும் முகமது ரிஸ்வான் கூறும் பொழுது “விராட் கோலி செய்யும் கடின உழைப்பை கண்டு நான் மிகவும் ஆச்சரியமடைகிறேன். உலகமே அவரை ஃபார்மில் இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தது. ஆனால் இவ்வளவு பெரிய ஆட்டத்தில் இறங்கி சிரமம் இன்றி ரன்கள் எடுத்து சதமும் அடித்திருக்கிறார். அவருடைய உடல் தகுதி மற்றும் பணி நெறிமுறைகள் பாராட்டத்தக்கது. அவரை அவுட் செய்ய எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம் ஆனால் வெளியேற்ற முடியவில்லை”
இதையும் படிங்க : எங்க வீரர்களுக்கு இந்திய வீரர்களின் திறமை இல்ல.. கூடவே மூளையும் சுத்தமா இல்ல – அக்தர் விமர்சனம்
“நாங்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து வெளியேறி விட்டோம் என்று கூறலாம். நாங்கள் தற்போது மற்ற அணிகளின் முடிவுகளை சார்ந்து எதிர்பார்த்து இருக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இன்னும் ஒரு ஆட்டம் இருப்பதால் ஏதோ கொஞ்சம் நம்பிக்கை இருக்கிறது. ஆனாலும் ஒரு கேப்டனாக அடுத்த அணிகளை சார்ந்து இருக்க வேண்டிய இந்த நிலைமை எனக்கு நல்ல ஒன்றாக இல்லை” என்று கூறியிருக்கிறார்.






