ஆசியக் கோப்பை தொடருக்கான பத்திரிகையாளர் சந்திப்பில் ஆப்கானிஸ்தான் அணி பற்றிய பேச்சுக்கு பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா கொடுத்த ரியாக்ஷன் வைரல் ஆகி வருகிறது.
நேற்று ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்கும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் யுஏஇ அணிகளின் கேப்டன்கள் பங்குபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் மூன்று கேப்டன்களும் தங்களுடைய அணிகளின் பலம் மற்றும் திட்டங்கள் குறித்து பேசினார்கள்.
சமீப காலகட்டத்தில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ஆசியாவில் இந்தியாவுக்கு அடுத்து மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த அணியாக ஆப்கானிஸ்தான் இருந்து வருகிறது. 2024 ஆம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் அரை இறுதிக்கு முன்னேறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அந்தத் தொடரில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் முதல் சுற்று உடன் வெளியேறியிருந்தது.
இது குறித்து நேற்றைய சந்திப்பில் பத்திரிக்கையாளர் ஒருவர் ஆப்கானிஸ்தான் அணியை பாராட்டி பேசினார். அவர் ஆசியாவின் இரண்டாவது சிறந்த அணி ஆப்கானிஸ்தான் என்று கூறினார். பத்திரிக்கையாளர் இப்படி கூறியதும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா நக்கலாக சிரித்தார். தற்போது இது சர்ச்சையாக மாறியிருக்கிறது.
பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா சிரித்தது ஆப்கானிஸ்தான் அணியை கேவலப்படுத்துவதற்காக என்று சமூக வலைதளங்களில் ஆப்கான் கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையான முறையில் விமர்சனம் செய்து வருகிறார்கள். அதே சமயத்தில் அந்த சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் சல்மான் அலி ஆகா இப்படி செய்து விட்டார் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : 2025 ஆசிய கோப்பை.. இலங்கை அணி அறிவிப்பு.. 2 பழைய கைகள் சேர்ப்பு.. சவால் தரும் செலக்சன்
தங்களது அணி குறித்து பேசி உள்ள ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் “இங்கே எங்களுக்கு குறிப்பிட்ட இலக்கு எதுவும் கிடையாது. நாங்கள் எங்கள் மீது கூடுதல் அழுத்தத்தை கொடுத்துக் கொள்ள விரும்பவில்லை. நாங்கள் கடந்த சில வருடமாக சரியான கிரிக்கெட் பிராண்டை விளையாடியிருக்கிறோம். அதுதான் எங்களுடைய இலக்கு. நாங்கள் அதே ஆற்றலை, செயல் திறனை, முயற்சியை எடுத்துச் செல்ல முயற்சிக்கிறோம். களத்தில் சென்று அணிகளை வீழ்த்துவது என்பது வேறு. நான் சொல்வது களத்திற்கு சென்று இருநூறு சதவீதத்தை கொடுப்பதை பற்றியது” என்று கூறியிருக்கிறார்.