நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி 4 போட்டிகளில் இரண்டு போட்டிகளை மட்டுமே வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியிருக்கிறது. நேற்று அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் மீண்டும் பேட்டிங்கில் தவறு செய்து தட்டுத் தடுமாறி வென்றது. இந்த போட்டிக்கு பிறகுகேப்டன் பாபர் அசாம் பாகிஸ்தான் அணிக்குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
தற்போது பாகிஸ்தான் அணியைச் சுற்றி நிறைய நெகட்டிவ்வான பேச்சுகள் சென்று கொண்டிருக்கின்றன. சொந்த நாட்டைச் சேர்ந்த முன்னாள் வீரர்களே பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் கேப்டனுக்கு எதிராகவும் பல கடுமையான கருத்துக்களைக் கூறிக் கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் “பந்து வீச்சில் நாங்கள் நன்றாகவே இருந்தோம் ஏனென்றால் இங்கு வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான நிலை இருந்தது. பேட்டிங்கில் இந்தியா மற்றும் அமெரிக்க அணிகளுக்கு எதிராக நாங்கள் சில தவறுகள் செய்தோம். நாங்கள் வெற்றிகரமான நிலையில் இருந்தோம். ஆனால் தொடர்ந்து நாங்கள் விக்கட்டுகளை இழந்தது, அழுத்தத்தைக் கொண்டு வந்தது. ஆனால் பந்துவீச்சில் சாதகமான அம்சங்கள் இருந்தது.
எங்களுக்கு நெருக்கமான போட்டிகள் இருந்தது அவற்றை எங்களால் வெற்றிகரமாக முடிக்க முடியவில்லை. எங்களிடம் நல்ல வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் ஒரு அணியாக நல்ல அணியாக இல்லை. எங்கள் ஒவ்வொரு வீரர்களிடமும் தனிப்பட்ட செயல்திறன் இருக்கிறது.
நான் எந்த இடத்தில் களம் இறங்குவேன் என்பது அணியின் தேவையை பொறுத்தது. மூன்றாவது இடத்திலும் களம் இறங்குவேன் தேவைப்பட்டால் துவக்க வீரராகவும் வருவேன். மேலும் ஒரு கேப்டனாக அணியில் இருக்கும் எல்லா பேட்ஸ்மேன்னுக்காகவும் நானே விளையாட முடியாது. நாங்கள் ஒரு அணியாகத் தோற்று இருக்கிறோம் எனவே தனிப்பட்ட நபர் யாரையும் இந்த தோல்விக்குப் பொறுப்பாக்க முடியாது” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : 201/6.. டி20 உலககோப்பை வரலாற்றில் தனிச்சாதனை.. நெதர்லாந்தை வென்று இலங்கை ஆறுதல் வெற்றியுடன் வெளியேறியது
கடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் பாகிஸ்தான் அணி, கேப்டன் பொறுப்பு என எல்லாவற்றிலும் மாற்றங்கள் ஏற்பட்டது. இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் ஏற்பட்ட தோல்வியின் காரணமாகப் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் என்ன மாதிரி மாற்றங்கள் ஏற்பட இருக்கிறது என்பது குறித்து கிரிக்கெட் உலகம் சுவாரசியமாகக் காத்திருக்கிறது






