பாகிஸ்தான் ‘ஏ’ அணி இந்திய அணியை வீழ்த்தும்; இப்போது…! – சல்மான் பட் பரபரப்பு பேச்சு!

0
13921
Salman Butt

தற்போது பெரிய கிரிக்கெட் நாடுகள் பாகிஸ்தான் நாட்டிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்ய ஆரம்பித்துள்ளது. இது பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு மீண்டும் ஒரு ஆரோக்கியமான காலத்தைக் கொண்டு வரும் என்பதில் சந்தேகமில்லை.

இதன் மூலம் அவர்களின் கிரிக்கெட் வருமானம் அதிகரிக்கும். அதைக் கொண்டு அவர்கள் உள்நாட்டு கிரிக்கெட் அமைப்பை வலுப்படுத்தலாம். மேலும் சர்வதேச அளவில் தங்கள் நாடு பாதுகாப்பானது என்று அறிவிக்கலாம்.

- Advertisement -

இப்படி சில நல்ல சூழல்கள் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் காணப்பட்டாலும், முன்னாள் வீரர்கள் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். உள்நாட்டு கிரிக்கெட் அமைப்புகள் சீரழிந்து விட்டதாக, எதிர்கால வீரர்களை கண்டறிய வழியற்று இருப்பதாக குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள்.

மேலும் இந்திய கிரிக்கெட் வாரியம் உலக கிரிக்கெட்டில் பணக்கார அமைப்பாகும். இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாடும் பட்சத்தில் நிறைய பணம் கிடைக்கும். தற்போது சிலபல காலமாக இதை பாகிஸ்தான் இழந்திருக்கிறது. இதனால் அவர்களின் உள்நாட்டு கிரிக்கெட் வளர்ச்சி பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று கூட கூறலாம்.

1999ஆம் ஆண்டு கார்கில் போருக்குப் பிறகு 2004 ஆம் ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க ஒரு கிரிக்கெட் சுற்றுப் பயணத்தில் இந்திய அணி பாகிஸ்தான் சென்றது. சவுரவ் கங்குலி தலைமையிலான அந்த இந்திய அணி ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடரை அபாரமாக கைப்பற்றியது.

- Advertisement -

ஆனால் இதற்கு முன்னதாக பாகிஸ்தான் ஏ அணியுடன் ஒருநாள் பயிற்சி போட்டியில் இந்திய அணி அதிர்ச்சிகரமான ஒரு தோல்வியை சந்தித்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 335/6 என்ற பெரிய இலக்கை நிர்ணயித்தது. ஆனால் அதனை இளம் பாகிஸ்தான் அணி 4 ஓவர்கள் மீதம் வைத்து அனாயசமாக வென்றது. உமர் 104 ரன்கள் விளாசினார். இம்ரன் நசீர் வெறும் 32 பந்தில் 65 ரன்களை அதிரடியாக குவித்தார்.

தற்போது இந்த வரலாற்று சிறப்புமிக்க ஒரு போட்டியை நினைவுகூர்ந்து, பாகிஸ்தான் அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் சல்மான் பட் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகத்தை விளாசித் தள்ளி இருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறும்போது ” 2004ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் வந்தது எனக்கு நினைவுக்கு இருக்கிறது. அவர்கள் பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிராக ஒரு பயிற்சி போட்டியில் விளையாடினார்கள். அந்தப் போட்டியில் பாகிஸ்தான் ஏ அணி இந்திய அணியை வீழ்த்தியது. இம்ரன் நசீர் சிறப்பாக ரன்கள் குவித்தார். அந்தப் போட்டி கடாபி மைதானத்தில் நடைபெற்றது. அது அதிக ஸ்கோர் கொண்ட ஒரு போட்டி. இப்பொழுது அப்படிப்பட்ட ஒரு பாகிஸ்தான் இளம் அணியை அமைப்பதற்கான அமைப்பு மற்றும் அடிப்படை உங்களிடம் இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” என் காலத்தில் இது இருந்தது. நான் பாகிஸ்தான் ஏ அணிக்காக தென்னாபிரிக்க சுற்றுப் பயணத்திற்கு சென்றிருக்கிறேன். அன்டர் 19 சுற்றுப்பயணங்கள் கூட நடந்தது. இப்போது எதுவும் இல்லை. இது யாருடைய குற்றம்? நீங்கள் அமைப்புக்கு என்ன கொண்டு வந்தீர்கள்? இதற்கு பதில் நிறைய இருக்கிறது ஆனால் யாரும் பதில் கூற மாட்டார்கள் ” என்று கடுமையாக குற்றம் சாட்டி இருக்கிறார்!