PAK vs NED.. இந்திய மண்ணில் பாகிஸ்தான் வரலாற்று வெற்றி.. உலக கோப்பையில் நெதர்லாந்து அணியை எளிதில் வீழ்த்தியது!

0
361
Pakistan

ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது நாளான இன்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் பாகிஸ்தான் அணி நெதர்லாந்து அணியை எதிர்த்து விளையாடிய போட்டி நடைபெற்றது!

இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி வந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் பேட்டிங்கில் சவுத் ஷகில் மற்றும் பந்துவீச்சில் ஹசன் அலி இருவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

- Advertisement -

பாகிஸ்தான அணி தனது முதல் மூன்று விக்கெட்டுகளான பஹார் ஜமான் 12, இமாம் உல் ஹக் 15, பாபர் அசாம் 5 ஆகியோரது விக்கெட்டுகளை 38 ரன்களுக்கு பவர் பிளேவில் இழந்தது.

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த முகமது ரிஸ்வான் மற்றும் சவுத் ஷகில் இருவரும் பொறுப்புடனும் அதே நேரத்தில் அதிரடியாக விளையாடி 120 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இறுதியாக இருவரும் அரைசதம் கடந்து, இருவரும் தலா 68 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். அடுத்து வந்த இப்திகார் அகமது 9 ரன்களில் வெளியேறினார்.

பாகிஸ்தான அணி ஆறு விக்கெட்டுகளை 188 ரன்களுக்கு இழந்து நெருக்கடியில் சிக்கியது. இந்த நிலையில் ஜோடி சேர்ந்த முகமது நவாஸ் மற்றும் சதாப் கான் இருவரும் பொறுப்புடன் விளையாடி அணியை மீட்டனர். இந்த ஜோடி 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

- Advertisement -

மீண்டும் ஒரு சரிவில் சிக்கிய பாகிஸ்தான் முகமது நவாஸ் 39, சதாப் கான் 32, ஹசன் அலி 0, ஹாரிஸ் ரவுப் 16, ஷாகின் அப்ரிடி 12* என ரன்கள் எடுக்க 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து தரப்பில் பாஸ் டி லீட் 9 ஓவர்களுக்கு 62 ரன்கள் தந்து நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து கொஞ்சம் பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய நெதர்லாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர் விக்ரம்ஜித் சிங் 52, நான்காவது வீரராக வந்த பாஸ் டி லீட் 67 என குறிப்பிடும்படி ரன்கள் எடுத்தார்கள்.

நெதர்லாந்து அணிக்கு மற்ற யாரும் பெரிய ரன் பங்களிப்பை தரவில்லை. மேக்ஸ் ஓ டொனால்ட் 5, காலின் ஆக்கர்மேன் 17, தேஜா 5, கேப்டன் ஸ்காட் எட்வார்ட்ஸ் 0, சுல்பிகர் 10, வான் டெர் மெர்வ் 4, ஆரியன் தத் 1, பால் வான் மீக்கரன் 7, லோகன் வான் பீக் 28* ரன்கள் எடுக்க, 41 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்கள் எடுத்தது. இறுதியாக பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவுப் 3 விக்கெட் கைப்பற்றினார்.

இதுவரை பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையில் இந்திய மண்ணில் வெற்றி பெற்றது கிடையாது. 96 மற்றும் 2011 ஆம் ஆண்டு ஆசிய நாடுகளில் நடைபெற்ற உலகக் கோப்பையில், காலிறுதி மற்றும் அரையிறுதியில் இந்தியாவில் விளையாடி பாகிஸ்தான் அணி இரண்டு ஆட்டங்களிலும் தோற்று இருக்கிறது. இந்திய மண்ணில் பாகிஸ்தான் அணிக்கு இதுவே முதல் உலகக்கோப்பை வெற்றி ஆகும்!