PAK vs BAN.. மீண்டும் ஃபாஸ்ட் பவுலர்கள் அதிரடி.. பாபர் அசாம் இந்தியாவுடன் செய்த அதே தவறு.. பாகிஸ்தான் ஈஸி வெற்றி!

0
2426
Pakistan

இன்று 16ஆவது ஆசியக் கோப்பையின் இரண்டாவது சுற்று துவங்கியிருக்கிறது. இந்தச் சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான் லாகூரில் பாகிஸ்தான் பங்களாதேஷ் அணிகள் பலப்பரிட்சை நடத்தினர்.

இந்தப் போட்டிக்கான டாஸில் வென்ற பங்களாதேஷ் கேப்டன் இந்த முறையும் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதுவரை பங்களாதேஷ் விளையாடிய இந்த தொடரின் மூன்று போட்டிகளிலும் பங்களாதேஷ் கேப்டன் டாஸ் வின் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் பங்களாதேஷ் அணிக்காக துவக்க வீரராக அனுப்பப்பட்ட, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடித்த மெகதி ஹசன் மிராஸ் இந்தப் போட்டியில் தான் சந்தித்த முதல் பந்திலையே ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார். நஜீபுல் சாந்தோ காயம் காரணமாக தொடரிலிருந்து விலக, காய்ச்சல் காரணமாக வெளியில் இருந்த லிட்டன் தாஸ் மூன்றாவது வீரராக களத்திற்கு வந்தார்.

புதிய பந்தில் வழக்கம்போல பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் அனல் பறந்தது. முகமது நய்ம் 20, லிட்டன் தாஸ் 16, தவ்ஹித் ஹ்ரிடாய் 2 எனத் தொடர்ந்து வெளியேற, பங்களாதேஷ் நான்கு விக்கெட்டுகளை வெகுவேகமாக இழந்து விட்டது. இந்த போட்டியிலும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தனது வேகப்பந்துவீச்சாளர்களை முன்கூட்டிய பயன்படுத்தி, பங்களாதேஷ் அணியை சுருட்ட நினைக்காமல் இந்தியாவுடன் செய்த அதே தவறை செய்தார்!

இந்த நிலையில் அனுபவ வீரர்களான கேப்டன் ஷகிப் அல் ஹசன் மற்றும் முஷ்பிகியூர் ரஹீம் இருவரும் சேர்ந்து, மிகப் பொறுமையுடன் விளையாடி பங்களாதேஷ் அணியை சரிவிலிருந்து மெல்ல மெல்ல மீட்டுக் கொண்டு வந்தார்கள். சிறப்பாக விளையாடிய இருவரும் அரை சதம் எடுத்து 53 மற்றும் 64 ரன்களில் வெளியேறினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து சமீம் ஹுசைன் 16, அபிப் ஹூசைன் 12, டஸ்கின் அஹமத் 0, சோரிபுல் இஸ்லாம் 1 மற்றும் முகமது ஹசன் 1* ரன்கள் எடுக்க, பங்களாதேஷ் அணி 38.4 ஓவர்களில் 193 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

கடைசியில் திரும்பி வந்த பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர்கள் கடைசி நான்கு விக்கெட்டுகளை அதிரடியாக வீழ்த்தி பங்களாதேஷ் அணியை சுருட்டினார்கள். ஹாரிஸ் ரவுப் ஆறு ஓவர்களுக்கு 19 ரன்கள் தந்து நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய பாகிஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் பகார் ஜமான் 20, கேப்டன் பாபர் அசாம் 17, இமாம் உல் ஹக் 78 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். ஆட்டம் இழக்காமல் முகமது ரிஸ்வான் 63, ஆகா சல்மான் 12 ரன்கள் எடுக்க, 39.3 ஓவரில் இலக்கை எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை இரண்டாவது சுற்றில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

இதற்கு அடுத்து இந்திய அணியை நான்கு நாள் இடைவெளியில் சந்திக்கிறது. இது இந்திய அணிக்கு இரண்டாவது சுற்றில் முதல் போட்டியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது!