PAK vs AFG.. பாபர் அசாம் நச் சாதனையை உடைத்த குர்பாஸ்; 300 ரன் குவித்து ஆப்கன் பாகிஸ்தானுக்கு பதிலடி!

0
2773
Gurbaz

ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பைக்கு முன்பாக பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் அணிகள் இலங்கையில் வைத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தற்பொழுது மோதி வருகின்றன!

நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தத் தொடரின் முதல் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 201 ரன்களுக்கு சுருண்டது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதல் வெற்றியை பெறுகின்ற வரலாற்று சிறப்புமிக்க சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் அணி இருந்தது.

- Advertisement -

ஆனால் இரண்டாவதாக இலக்கை நோக்கி பேட்டிங் செய்ய வந்த ஆப்கானிஸ்தான் அணியை பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் அப்படியே சுருட்டி எறிந்து விட்டார்கள். ஆப்கானிஸ்தான அணி 59 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, 142 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இந்தச் சூழ்நிலையில் தொடரின் இரண்டாவது போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி, இந்த முறை முதலில் பேட்டிங் செய்வது என தீர்மானித்தது. ஆப்கானிஸ்தான் அணி நிர்வாகத்தின் இந்த முடிவை துவக்க ஆட்டக்காரர்கள் குர்பாஸ் மற்றும் இப்ராகிம் ஜட்ரன் இருவரும் நியாயப்படுத்தினார்கள்!

நிலைத்து நின்ற இந்த ஜோடி 50, 100, 150 என்று பார்ட்னர்ஷிப் அமைத்து இறுதியில் இருநூறு ரண்களையும் தாண்டியது. ஒரு முனையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குர்பாஸ் தனது ஐந்தாவது சதத்தை அடித்து அமர்க்களப்படுத்தினார்.

- Advertisement -

இது அவருக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் 23 இன்னிங்ஸ்களில் ஐந்தாவது சதம் ஆகும். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களான பாபர் அசாம், ஹசிம் ஆம்லா, ஷிகர் தவான் ஆகியோர் குறைந்த இன்னிங்ஸில் முதல் ஐந்து ஒருநாள் கிரிக்கெட் சதங்கள் அடித்திருந்த சாதனைகளை அவர் முறியடித்தார்.

மிகச் சிறப்பாக விளையாடிய குர்பாஸ் 151 பந்துகளில் 14 பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 151 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவருடன் சேர்ந்து சிறப்பாக விளையாடிய இப்ராஹிம் ஜட்ரன் 101 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 80 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்து, முதல் ஆட்ட தோல்விக்கு பாகிஸ்தான் அணிக்கு பதிலடி கொடுத்திருக்கிறது.

ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸ்களில் முதல் ஐந்து சதங்களை அடித்த பேட்ஸ்மேன்கள்:

குயிண்டன் டிகாக் தென் ஆப்பிரிக்கா 19 இன்னிங்ஸ்
இமாம் உல் அக் பாகிஸ்தான் 19 இன்னிங்ஸ்
ரஹமனுல்லா குர்பாஸ் ஆப்கானிஸ்தான் 23 இன்னிங்ஸ்
பாபர் ஆஸம் பாகிஸ்தான் 25 இன்னிங்ஸ்
உபுல் தரங்கா இலங்கை 28 இன்னிங்ஸ்
ஷிகர் தவான் இந்தியா 28 இன்னிங்ஸ்
ஹசிம் ஆம்லா தென் ஆப்பிரிக்கா 30 இன்னிங்ஸ்