PAK vs AFG.. 9 விக்கெட்.. மன்கட் ரன் அவுட்.. வரலாற்று சிறப்புமிக்க முதல் வெற்றியை ஆப்கானிஸ்தான் தவறவிட்டது.. 2022 ஆசியக் கோப்பையை கண்முன்னால் காட்டிய நசிம் ஷா!

0
8575
Afghanistan

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது இலங்கையில் வைத்து நடத்தப்பட்டு வருகிறது!

நேற்று முன்தினம் நடந்த இந்த தொடரின் முதல் போட்டியில், பாகிஸ்தான் அணி வெறும் 59 ரன்களுக்கு ஆப்கானிஸ்தான் அணியை சுருட்டி 142 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்தது.

- Advertisement -

இன்று தொடரின் இரண்டாவது போட்டி நடைபெற்றது. போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கடந்த போட்டியில் மிகக் குறைந்த ரன்களுக்கு சுருண்டதற்கு இந்த முறை ஆப்கானிஸ்தான் அணி பதிலடி தந்தது.

அந்த அணியின் துவக்க ஜோடி ரஹமன்னுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஜட்ரன் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 227 ரன்கள் சேர்த்து அசத்தினார்கள். இப்ராகிம் ஜட்ரன் 80 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். மற்றுமொரு துவக்க ஆட்டக்காரர் குர்பாஸ் மிகச் சிறப்பாக விளையாடி 151 பந்துகளில் 14 பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 151 ரன்கள் சேர்த்தார். 50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் குவித்தது.

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் பகார் ஜமான் 30, இமாம் உல் ஹக் 91 ரன்கள் எடுத்தார்கள். கேப்டன் பாபர் அசாம் 53 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதுவரை பாகிஸ்தான் அணி ஆட்டத்தில் மிகவும் முன்னிலையில் இருந்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து முகமது ரிஸ்வான் 2, ஆகா சல்மான் 14, உசாமா 0, இப்திகார் அகமது 17, ஷாகின் அப்ரிடி 4 ரன்கள் எடுத்து வெளியேற, பாகிஸ்தான அணி 47.4 ஓவரில் எட்டு விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி இரண்டு ஓவரில் கைவசம் இரண்டு விக்கெட்டுகள் இருக்க வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்டது.

இந்த நிலையில் 49ஆவது ஓவரை வீசிய அப்துல் ரகுமான் அந்த ஓவரில் 16 ரன்கள் விட்டுத் தந்தார். களத்தில் நின்ற சதாப் கான் நம்பிக்கை அளித்தார். இந்த நிலையில் கடைசி ஓவரை வீச வந்த பரூக்கி சதாப் கானை மன்கட் ரன் அவுட் செய்தார். சதாப்கான் 48 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதை அடுத்து பாகிஸ்தான் அணிக்கு கைவசம் ஒரு விக்கெட் இருக்க கடைசி ஓவருக்கு 11 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது.

பரூக்கியின் ஐம்பதாவது ஓவரின் முதல் பந்தை நசீம் ஷா பவுண்டரிக்கு விரட்டினார். அடுத்த பந்தை தவறவிட்டு அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்தார். இதற்கு அடுத்த பந்தை சந்தித்த ஹாரிஸ் ரவுப் மூன்று ரன்கள் எடுக்க, கடைசி இரண்டு பந்துக்கு, மூன்று ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தை சந்தித்த நசீம் ஷா எட்ஜில் பவுண்டரி அடிக்க, பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் ஒரு ரன் வித்தியாசத்தில் போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது.

இதே போலான சூழ்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியை நசீம் ஷா இதே பந்துவீச்சாளரை எதிர்கொண்டு இரண்டு சிக்ஸர்கள் அடித்து பாகிஸ்தான் அணியை வெல்ல வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தான் அணிக்கு பாகிஸ்தான் அணிக்கு எதிரான வரலாற்று சிறப்புமிக்க ஒருநாள் கிரிக்கெட் முதல் வெற்றி இந்த முறையும் தள்ளிப் போய் இருக்கிறது!