“நம்ம பையன்ல.. அப்படியே சின்ன வயசுல யுவராஜ் சிங்க பார்த்த மாதிரி இருக்கு!” – கும்ப்ளே இந்திய வம்சாவளி வீரருக்கு மனம் திறந்த பாராட்டு!

0
680
Rachin

நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிராக 13வது ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி அசாத்திய செயல்பாட்டை வெளிப்படுத்தி வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது!

இந்தப் போட்டியில் 283 ரன்கள் இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு 23 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இடது கை இளம் பேட்ஸ்மேன் ரச்சின் ரவீந்தரா 82 பந்துகளில் அதிரடி சதம் அடித்து அசத்தினார்.

- Advertisement -

இவர் ஆரம்பித்த விதம் இங்கிலாந்து அணியின் நம்பிக்கையை உடைப்பதாக அமைந்தது. கான்வே 152 ரன்கள் குவித்த போதும் இவருக்கே இதனால் ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது. அறிமுக உலகக் கோப்பை போட்டியில் சதம் அடித்ததோடு ஆட்டநாயகன் விருதையும் வென்று அசத்தியிருக்கிறார்.

மேலும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஹைதராபாத்தில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் துவக்க வீரராக அனுப்பப்பட்ட இவர் அந்த வாய்ப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு 97 ரன்கள் குவித்து மிரட்டினார். நேற்று கேன் வில்லியம்சன் விளையாட முடியாத காரணத்தினால் இவருக்கு மூன்றாவது இடத்தில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பையும் மிக அழகாக கைப்பற்றி இருக்கிறார்.

இவரது தந்தை சென்னையில் லீக் போட்டிகளில் விளையாடியவர் என்கின்ற தகவல் கிடைக்கிறது. பிறகு இவர்கள் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்து, ரச்சின் ரவீந்தரா நியூசிலாந்துக்காக உள்நாட்டு போட்டிகளில் வெலிங்டன் அணிக்காக விளையாடி, நியூசிலாந்து தேசிய அணியில் தற்போது இடம் பிடித்து அசத்தியிருக்கிறார். கான்வே வெலிங்டன் அணியில் விளையாட கூடியவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் ரச்சின் ரவீந்தரா கூறும் பொழுது, தனக்கு சச்சின் மிகப்பெரிய ஐடியலாக இருந்ததாகவும், அவர் விளையாடிய நிறைய வீடியோக்களை பார்த்துள்ளதாகவும், இடதுகை வீரர் என்பதால் லாரா மற்றும் சங்கக்கரா மிகவும் பிடித்தவர்கள் எனவும், ஆனால் சச்சினே தனக்கு மிகவும் விருப்பமானவர் என்றும் கூறியிருக்கிறார். இவரது தந்தை ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் பெயரை இணைத்துதான் சச்சின் ரவீந்திர என்கின்ற பெயரை வைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட்டின் லெஜெண்ட் வீரர் அனில் கும்ப்ளே இவரைப் பற்றி கூறும் பொழுது “பாகிஸ்தானுக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் அவர் பேட்டி துவங்கிய பொழுது அவர் எவ்வளவு திறமையானவர் என்பதை நாம் பார்த்தோம்.

ஆனால் உலக கோப்பையின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனுக்கு எதிராக அவர் விளையாடிய விதம் மிக அபாரமான ஒன்று. இது மிகச் சிறந்த இன்னிங்ஸ். இவரைப் பார்ப்பதற்கு நமது யுவராஜ் சிங்கை இளம் வயதில் பார்த்தது போலவே இருக்கிறது. இவர் மிகவும் நேர்த்தியானவர், அபாரமானவர்!” என்று பாராட்டியிருக்கிறார்!