ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலிமையான நிலையில் இருக்கிறது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 246 ரன்கள் எடுத்த நிலையில், இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 421 ரன்கள் எடுத்திருக்கிறது. மொத்தமாக தற்போது வரை இந்திய அணி 175 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.
இந்திய அணியில் தற்போது அதிகபட்சமாக கேஎல் ராகுல் 86 ரன்கள் எடுத்திருக்கிறார். அடுத்து ஜடேஜா 81* ஜெய்ஸ்வால் 80 ரன்கள் எடுத்திருக்கிறார்கள்.
சிறப்பு விக்கெட் கீப்பர் இருவர் அணியில் இடம் பெற்று இருக்கின்ற நிலையில், கேஎல்.ராகுலுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைப்பது கடினமாக இருந்தது. ஆனால் திடீரென விராட் கோலி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியதால் இவருக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட கேஎல்.ராகுல் சுழற் பந்துவீச்சுக்கு எதிராக மிகச்சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். பொதுவாக அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் பிரச்சனை இருந்து வந்தது. ஆனால் இந்த முறை வாய்ப்பை நல்ல முறையில் கேஎல்.ராகுல் பயன்படுத்தியிருக்கிறார்.
அடிக்க வேண்டிய பந்துகள் எதுவென்று அவருக்கு மிகத் தெளிவாகத் தெரிந்திருந்தது. அதனால் தடுக்க வேண்டிய பந்துகளை தடுத்து, அடிக்க வேண்டிய பந்துகளையும் நேராக அடித்து ரன்கள் சேர்த்தினார்.
கேஎல். ராகுல் ஆட்டம் குறித்து பேசி உள்ள முன்னாள் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஓவைஸ் ஷா கூறும்பொழுது “அவர் பேசியதை கேட்டால், இது போன்ற விக்கெட்டுகளில் விளையாடி வளர்ந்ததாகக் கூறியிருந்தார். மேலும் இந்த விக்கெட்டில் எப்படியான ஷாட்கள் விளையாடுவது என தேர்ந்தெடுத்ததை பற்றி கூறியிருந்தார். இந்த தெளிவு இருந்ததால்தான் அவர் விதிவிலக்கான ஒரு ஆட்டத்தை விளையாடினார். அவர் மொத்தம் நான்கு ஸ்வீப் ஷாட் மட்டுமே ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : “சதம் அடிக்காதது கவலை கிடையாது.. நான் யோசிச்சதே வேற..” – ஜெய்ஸ்வால் அதிரடியான பேட்டி
ஆனால் இங்கிலாந்து அணியில் உள்ள பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் ஸ்வீப் ஷாட் மட்டுமே விளையாடுகிறார்கள். ஆனால் அவரோ நேராக விளையாடுகிறார். இதன் மூலம் பவுண்டர்கள் அடிப்பது மட்டும் இல்லாமல் ஒரு ரன் மற்றும் இரண்டு ரன் எடுக்கிறார். அவர் சுழற் பந்துவீச்சை விளையாடும் பொழுது மணிக்கட்டை பயன்படுத்தி விளையாடி பந்தை கேப்பில் ஆடுகிறார்” என்று கூறியிருக்கிறார்.