இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் இரண்டு போட்டிகளை இங்கிலாந்து அணி வென்று இருக்க இன்று மூன்றாவது போட்டி தொடங்கியது. கடைசி 8 ஓவர்களில் இங்கிலாந்து அணிக்கு வெஸ்ட் இண்டீஸ் சிறப்பான செக் வைத்திருக்கிறது.
இன்றைய போட்டிக்கான டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் தைரியமாக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 76 ரன்கள் எடுத்தார்கள். மைக் லூயிஸ் 61 பந்துகள் சிறப்பாக விளையாடி 26 ரன்கள் எடுத்தார். இன்னொரு துவக்க ஆட்டக்காரர் கேப்டன் பிரத்வெயிட் அதிரடியாக 86 பந்தில் 61 ரன்கள் எடுத்தார்.
ஆனால் இவர்களை தொடர்ந்து அடுத்து வந்த மூன்று பேட்ஸ்மேன் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இவர்களுக்கு பிறகு விக்கெட் கீப்பர் ஜோஸ்வா டி சில்வா 99 பந்துகளில் 49 ரன்கள், ஜேசன் ஹோல்டர் 112 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து ஓரளவுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியை மீட்டார்கள்.
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 75.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 282 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் கஸ் அட்கின்சன் 4, கிறிஸ் வோக்ஸ் 3, மார்க் வுட் 2, சோயப் பஷீர் 1 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.
இதற்கு அடுத்து போட்டியில் எட்டு ஓவர்கள் மட்டுமே மிச்சம் இருந்தது. இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஜாக் கிரவுலி 13 பந்தில் 18 ரன்கள் எடுத்து ஜெய்டன் சீல்ஸ் பந்து வீச்சிலும், பென் டக்கெட் 12 பந்தில் 3 ரன்கள் எடுத்து அல்ஜாரி ஜோசப் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்து வெளியேறினார்கள். இதற்கு அடுத்து நைட் வாட்ச்மேன் ஆக அனுப்பப்பட்ட மார்க் வுட் 8 பந்துகள் விளையாடி ரன் ஏதும் எடுக்காமல் ஜெய்டன் சீல்ஸ் பந்தில் வெளியேறினார்.
இதையும் படிங்க : 201 ரன்.. சிவம் சிங் அதிரடி சதம்.. அஸ்வின் வருண் அசத்தல் பவுலிங்.. திண்டுக்கல் மதுரையை வீழ்த்தி பிளே ஆஃப்க்கு தகுதி
இன்றைய ஆட்ட நேரம் முடிவில் இங்கிலாந்து அணி எட்டு ஓவர்கள் விளையாடி மூன்று விக்கெட்டுகளை இழந்து 38 ரன்கள் எடுத்திருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி ஆரம்பத்தில் சரிந்து பிறகு நிமர்ந்தது. பிறகு பந்துவீச்சிலும் சிறப்பான முறையில் தொடங்கி இருக்கிறது. மூன்றாவது டெஸ்ட் முதல் நாளில் தற்போது வெஸ்ட் இண்டிஸ் கைகள் ஓங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.






