நடப்பு டிஎன்பிஎல் தொடரில் சீசேம் மதுரை பாந்தர்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பெரிய ரன்கள் குறித்து எளிதான வெற்றியை பெற்றது.
இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற மதுரை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு துவக்க வீரராக வந்த விமல் குமார் 14 பந்தில் 23 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதற்கு அடுத்து இந்திரஜித் 23 பந்தில் 29 ரன்கள், சி.சரத்குமார் 13 பந்தில் 19 ரன்கள், தினேஷ் ராஜ் 8 பந்தில் 13* ரன்கள் எடுத்தார்கள்.
ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடிய இன்னொரு துவக்க ஆட்டக்காரர் சிவம் சிங் அற்புதமாக விளையாடி இறுதி வரை ஆட்டம் இழக்காமல் சதம் அடித்தார். 57 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 106 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது. மதுரை தரப்பில் பந்துவீச்சில் கார்த்திக் மணிகண்டன் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய மதுரை அணிக்கு துவக்க ஆட்டக்காரர் விக்கெட் கீப்பர் லோகேஷ் குமார் 37 பந்துகளில் அதிரடியாக 55 ரன்கள் எடுத்தார். இதைத்தொடர்ந்து ஜெ.கவுசிக் 22 பந்தில் 28 ரன்கள், சதுர்வேதி 12 பந்தில் 18 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணிக்கு இரண்டு ஓவர்கள் மீதம் இருக்கும் பொழுதே தோல்வி உறுதியான நிலையில் இருந்தது.
கடைசிக் கட்டத்தில் சரவணகுமார் ஆட்டம் இழக்காமல் 13 பந்தில் 22 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் மதுரை அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. ரவிச்சந்திரன் அஸ்வினின் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி இந்த வெற்றியின் மூலம் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது.
இந்த போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் பந்துவீச்சில் சந்திப் வாரியர் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்கள். பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் வரும் சக்கரவர்த்தி நான்கு ஓவர் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே விட்டுத் தந்து ஒரு விக்கெட் கைப்பற்றினார்.
இதையும் படிங்க : சூரியகுமார் இல்லை.. எங்க ஆஸ்திரேலியா பையன்தான் 360 டிகிரி இம்பேக்ட் பிளேயர் – ரிக்கி பாண்டிங் கணிப்பு
கடந்த டிஎன்பிஎல் சீசன்களை விட இந்த முறை போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. மேலும் மைதானத்திற்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக மாநிலங்களில் நடைபெறும் டி20 லீக்குகளில் தமிழகத்தில் நடக்கும் டிஎன்பிஎல் தொடர் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது!






