“ஒரு பக்கம் சச்சின் பாஜி.. இன்னொரு பக்கம் என் மனைவி ரசிகர்கள் என எல்லோரும்..!” – விராட் கோலி வியப்பான பேச்சு!

0
1281
Virat

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்று மும்பை வான்கடே மைதானத்தில் இருந்து பல மகிழ்ச்சியான தருணங்கள் வந்து கொண்டே இருக்கிறது.

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மும்பையில் தற்பொழுது நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் குவித்து இருக்கிறது.

- Advertisement -

மிகச் சிறப்பாக விளையாடிய விராட் கோலி சச்சின் ஒருநாள் கிரிக்கெட் சத சாதனையை முறியடித்து ஐம்பதாவது சதம் அடித்து அசத்தியிருக்கிறார். கூடியிருந்த அத்தனை ரசிகர்களுக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியை இது கொண்டு வந்திருக்கிறது.

இன்னொரு பக்கத்தில் விராட் கோலி உடன் இணைந்து விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 67 பந்துகளில் அதிரடியாக சதம் அடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். எந்த இடத்திலும் வேகத்தை விட்டுக் கொடுக்காமல் விளையாடிய ஸ்ரேயாஸ் அணி 397 ரன்கள் குவிக்க முக்கிய காரணமாக இருந்தார்.

சூரியகுமார் யாதவை வைத்துக்கொண்டு இந்திய கேப்டன் கேஎல் ராகுலை முன்கூட்டியே கடைசியில் அனுப்பி வைத்தார். இதை நியாயப்படுத்தும் விதமாக ராகுல் 20 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 39 ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

மேலும் இந்திய அணிக்கு 2019 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக ஏற்பட்ட தோல்விக்கு, இன்று நடைபெற்ற சம்பவங்கள் சிறந்த மருந்தாக மாறி இருக்கின்றன என்று கூற வேண்டும்.

இந்த நிலையில் சதம் அடித்து சச்சின் சத சாதனையை முறியடித்த விராட் கோலி பேசும் பொழுது “கொல்கத்தாவிலும் சொன்னேன் ஒரு பெரிய மனிதர் என்னை வாழ்த்தினார். இதெல்லாம் உண்மையில் ஒரு கனவு போல இருக்கிறது. அதே பெரிய மனிதர் சச்சின் என்னை வாழ்த்தினார். இதெல்லாம் விவரிக்க முடியாத உணர்வாக இருக்கிறது.

இன்று மீண்டும் ஒரு பெரிய ஆட்டம். அணியில் உள்ள மற்ற வீரர்கள் வந்து அவர்களை வெளிப்படுத்தி விளையாடுவதற்கு, நான் ஒரு முனையில் நின்று விளையாட வேண்டி இருந்ததை மீண்டும் ஒருமுறை செய்திருக்கிறேன். எல்லாமே மிக நேர்த்தியாக வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

இந்த போட்டியில் எனக்கு ஒரு ரோல் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் எனது திறமைக்கு ஏற்றவாறு நான் விளையாட முயற்சிக்கிறேன். நான் நின்று ஆழமாக போட்டியை எடுத்துச் செல்ல வேண்டும். இதனால் என்னை சுற்றி இருப்பவர்கள் அவர்கள் இயல்பில் விளையாட முடியும். அதேபோல் நானும் இறுதிக்கட்ட ஓவர்களில் அதிரடியாக விளையாடுவேன்.

நான் சதம் அடித்த பொழுது ஸ்டாண்டில் சச்சின் பாஜி இருந்தார். என் மனைவியும் அங்கு இருந்தார். ரசிகர்கள் இருக்கிறார்கள். இதை விளக்குவது மிகவும் கடினம். எனது ஹீரோ, நான் நேசிக்கும் நபர், ரசிகர்கள் என எல்லாம் அந்த நேரத்தில் இருந்தது ஆச்சரியமான ஒன்று!” என்று கூறியிருக்கிறார்!