ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா ஆரம்பித்த முதல் நாளிலேயே நடப்பு சாம்பியன் வீழ்த்தப்பட்டு களைக்கட்டியது. ஞாயிறானா இன்று இரட்டைக் கொண்டாட்டங்களாக, மும்பையை எதிர்த்து டெல்லி விளையாடி வென்றது. பெங்களூருக்கு எதிரான பஞ்சாப்பின் இரண்டாவது ஆட்டம் ஞாயிறுக்கான பொழுதுபோக்குத் தீனியாக அமைந்திருக்கிறது.
போட்டியைத் துவங்குவதற்கான டாஸில் பஞ்சாப் கேப்டன் மயங்க் வென்று, தன் அணி பந்துவீசும் என அறிவித்தார். பெங்களூருக்கு துவக்கம் தர கேப்டன் பாப் டூ பிளிசிசும் இளம் வீரர் அனுஜ் ராவத்தும் களம் புகுந்தனர். முதல் விக்கெட்டுக்கு 50 ரன் அடித்து அனுஜ் ராவத் வெளியேற, விராட் கோலி களத்திற்குள் வர, கேப்டன் பாப் டூ பிளிசசின் பேட்டிங் சூடு பிடித்தது.
ஆட்டத்தில் ஓடியன் ஸ்மித் வீசிய 13வது ஓவரில் சிக்ஸ், ஃபோர் என பாப் டூ பிளிசிஸ் வெறித்தனமாய் 23 ரன்கள் அடிக்க, ஆட்டம் இரசிகர்களுக்கு விருந்தாய் மாற ஆரம்பித்தது. இறுதியாக மூன்றே பவுண்டரிகள் அடித்த பாப் டூ பிளிசிஸ் ஏழு சிக்ஸர்களோடு 57 பந்துகளில் 88 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். பின்பு களமிறங்கிய தமிழக வீரர் தினேஷ் கார்த்தி பாப் விட்டதை தொடர பெங்களூர் இருபது ஓவர்களில் 205/2 ரன்களை குவித்தது.
பஞ்சாபின் ஆட்டத்தைத் துவங்க களமிறங்கிய தவான்-மயங்க் ஜோடியும் பெங்களூர் வைத்த விருந்துக்குச் சளைக்காத ஒரு விருந்தை பேட்டிங்கில் படைத்தது. இருவரும் சேர்ந்து அணிக்கு 75 ரன்களை தர, அடுத்து வந்த பெரிய எதிர்ப்பார்ப்பில்லாத இலங்கையின் பனுகா ராஜபக்சே 22 பந்துகளில் 43 ரன்களை அடிக்க, வெற்றி வாய்ப்பு இரு அணிகளுக்கும் சமமானது.
அடுத்து பனுக ராஜபக்சே, ராஜ் பவா, லிவிங்ஸ்டன் வெளியேற ஆட்டத்தில் இறுதிக்கட்ட பரபரப்பு தொற்றிக்கொண்டது. களத்தில் தமிழகத்தின் அதிரடி இளம்புயல் ஷாரூக்கானும், வெஸ்ட் இன்டீசின் பிக் ஹிட்டர் ஓடியன் ஸ்மித்தும் இருந்தனர். 18-வது ஓவரை சிராஜ் வீச, தான் வீசிய ஒரே ஓவரில் 23 ரன்களை தந்திருந்த ஓடியன் ஸ்மித், அதே 23 ரன்களை சிராஜின் ஓவரில் அடித்துத் துவைத்து எடுத்துவிட்டார். ஆட்டத்திலிருந்த மொத்த அழுத்தமும் நீங்கி பஞ்சாப் வெற்றி பெற்றது. அத்தோடு 200+ ரன்களுக்கு மேல் அதிகமுறை (4) இலக்கை வெற்றிக்கரமாக அடைந்த அணியென்ற பெருமையையும் தட்டிச்சென்றது.