ஓய்வு முடிவை அறிவித்த ஆல்ரவுண்டர்; அதிர்ச்சியில் கிரிக்கெட் வாரியம்!

0
88

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் காலின் டி கிரந்தோம் அறிவித்திருக்கிறார்.

- Advertisement -

நியூசிலாந்து அணிக்காக கடந்த 2012 ஆம் ஆண்டு அறிமுகமான காலின் டி கிரந்தோம், மிதமான வேகம் மற்றும் கீழ் வரிசையில் களம் இறங்கி பேட்டிங்கில் மிகச் சிறந்த பங்களிப்பு என நம்பிக்கை அளிக்கும் ஆல்ரவுண்டராக திகழ்ந்து வந்தார்.

ஜிம்பாப்வே நாட்டில் பிறந்த காலின் டி கிரந்தோம் 2006 ஆம் ஆண்டு அந்நாட்டிலிருந்து வெளியேறி நியூசிலாந்து நாட்டிற்கு குடியேறினார். 2012 ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாக விளையாடி வந்த காலின் டி கிரந்தோம், 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் இரண்டு சதம் மற்றும் எட்டு அரை சதங்கள் அடங்கும். மேலும் 49 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். கடைசியாக லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியை கடந்த ஜூன் மாதம் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

45 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள காலின் டி கிரந்தோம், 742 ரன்கள் அடுத்தது மட்டுமல்லாமல் 30 விக்கெட்களையும் கைப்பற்றி ஒருநாள் போட்டிகளிலும் நம்பிக்கை அளிக்கும் ஆல் ரவுண்டராக நியூசிலாந்து அணிக்கு திகழ்ந்தார். 41 டி20 போட்டிகளில் விளையாடி, 55 ரன்கள் மற்றும் 12 விக்கெட்களையும் கைப்பற்றி இருக்கிறார். டி20 போட்டிகளில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 140 ஆகும்.

36 வயதான காலின் டி கிரந்தோம், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார். அவர் தனது அறிக்கையில் அவ்வபோது ஏற்பட்டு வரும் காயம் மற்றும் தனது இடத்திற்கு நிலவி வரும் இளம் வீரர்கள் மத்தியிலான போட்டி ஆகியவற்றை காரணமாக குறிப்பிட்டு இருக்கிறார்.

“நான் இனி இளமையாக மாறப்போவதில்லை. மேலும் நாளுக்கு நாள் அணியில் பயிற்சியின் தீவிரம் அதிகரித்து வருகிறது. காயத்தை வைத்துக்கொண்டு என்னால் பயிற்சி செய்ய கடினமாக இருக்கிறது. மேலும் எனது குடும்பம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. குழந்தைகள் விரைவாக வளர்கிறார்கள். அவர்களின் எதிர்காலம் மற்றும் நியூசிலாந்து அணியில் எனது எதிர்காலம் என இதைப் பற்றி மட்டுமே கடந்த ஒரு வார காலமாக நினைத்து வருகிறேன். இவை அனைத்தையும் நினைத்து நான் மனதளவில் பாதிக்கப்பட்டால் எனது கிரிக்கெட் வாழ்க்கையும் பாதிப்பிற்கு உள்ளாகலாம். ஆகையால் இத்தகைய முடிவை ஒரு மனதாக எடுக்கிறேன்.

2012 ஆம் ஆண்டு அறிமுகமான நாள் முதல் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் என்னை நன்றாக கவனித்து வருகிறது. அணி நிர்வாகத்திற்கும் எனக்கும் உள்ள நட்புறவு என்னை கலங்க வைக்கிறது. நியூசிலாந்து அணிக்கு நான் விளையாடியதை என் வாழ்நாள் பெருமிதமாக கருதுகிறேன்.

கடந்த 10 ஆண்டுகளில் எண்ணற்ற நிகழ்வுகள் இந்த அணியில் நிகழ்ந்திருக்கிறது. பல நண்பர்கள், அணியினர் மற்றும் பயிற்சியாளர்கள், எதிரணி வீரர்கள், எதிரணி நண்பர்கள், எதிரணியுடன் நடந்த சுவாரசியமான நிகழ்வுகள் என ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொன்றை எடுத்துச் சொல்லலாம். இனி வரும் காலம் எனக்கு சற்று கடினமானதாக தான் இருக்கும். விரைவில் நியூசிலாந்து அணிக்கு என்னால் முடிந்த பங்களிப்பை வேறு விதமாக கொடுப்பதற்கு முடிவு செய்வேன்.” என்று தனது ஓய்வு முடிவு அறிவித்த அறிக்கையில் காலின் டி கிரந்தோம் குறிப்பிட்டு இருந்தார்.

- Advertisement -