இப்பவும் சொல்றேன்… எங்களோட தோல்விக்கு ஸ்மித், ஹெட் காரணமில்லை; அடிக்கவிட்ட எங்கள் பவுலர்களை சொல்லணும் – கோபமாக பேசிய ராகுல் டிராவிட்!

0
802

“நாங்கள் பவுலிங்கில் டிராவிஸ் ஹெட்டை அடிக்க விட்டிருக்கக்கூடாது. அங்கே தவறு செய்துவிட்டோம்.” என போட்டி முடிந்தபின் ராகுல் டிராவிட் கோபமாக பேட்டியளித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணியை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸி., அணி முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது.

- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. இந்த முடிவு இந்திய அணிக்கு சாதகமாக அமையவில்லை.

முதல் இன்னிங்சில் ஆஸி., அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளை விரைவாக எடுத்துவிட்டாலும், நான்காவது விக்கெட்டிற்கு டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் ஜோடி சேர்ந்து 285 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதுதான் போட்டியில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 469 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பிறகு இந்திய அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 173 ரன்கள் பின்தங்கியிருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 270 ரன்கள் அடிக்க, மொத்தமாக 443 ரன்கள் முன்னிலை பெற்றிருந்ததை சேஸ் செய்ய முடியாமல் இந்திய அணி 234 ரன்களுக்கு ஆட்டம் இழந்து 209 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி சந்தித்தது.

- Advertisement -

தோல்விக்கான காரணம் குறித்து பேட்டி அளித்த தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசுகையில், “இவ்வளவு பெரிய டார்கெட்டை சேஸ் செய்வது கடினம் தான் ஆனால் எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. பல டெஸ்ட் போட்டிகளில் இந்த இரண்டு வருடங்களாக போராடி தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறோம். பல கடினமான சூழல்களை சந்தித்து இருக்கிறோம்.

ஓவல் பிட்ச் 469 ரன்களுக்கானது இல்லை. அதிக ஸ்கோர் அடிக்க விட்டுவிட்டோம். முதல் நாளே நாங்கள் பெரிய தவறுகளை செய்து விட்டோம். ஸ்மித், ஹெட் இருவரும் நன்றாக விளையாடினாலும், எங்களது பவுலர்கள் நல்ல லைன் மற்றும் லென்த் சரியாக வீசினாலும், நிறைய பந்துகளை சற்று விலகி வீசிவிட்டோம். அது ஹெட் பவுண்டரிகளாக அடிப்பதற்கு உதவியாக மாறியது. இருப்பினும் மூன்றாவது மற்றும் நான்காவது நாளில் மீண்டும் ஆட்டத்திற்குள் வந்துவிட்டோம்.

முதல் நாளைப் பார்க்கையில் மைதானத்தில் நிறைய புற்கள் இருந்தது. அதனால் தான் எங்களது திட்டம் அதற்கேற்றார் போல இருந்தது. பின்னர் அதில் சில மாற்றங்கள் வந்ததும் எங்களது திட்டம் மாறுபட்டுவிட்டது. இதற்கு முன்னர் நாங்கள் 300 ரன்களை சேஸ் செய்து இருக்கிறோம். ஆனால் இன்று ஆட்டம் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மைதானங்களில் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் அணியில் இருக்கின்றனர். இருப்பினும் ஆட்டம் எங்களது பக்கம் அமையவில்லை என்பது ஏமாற்றத்தை கொடுக்கிறது. இந்த பிட்ச் பேட்டிங் செய்ய நன்றாக இருந்தது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

(இத்தனை வருடங்கள் டிராபி ஜெயிக்காதது குறித்து) பல தொடர்களில் அரை இறுதிப் போட்டி, இறுதிப்போட்டி வரை வந்திருக்கிறோம். ஆனால் குறிப்பிட்ட நாளில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதன் காரணமாகத்தான் கோப்பைகளை வெல்ல முடியவில்லை. இருப்பினும் எங்களது அணியில் தலைசிறந்த வீரர்கள் இருக்கின்றனர். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. குறிப்பிட்ட நாள் எங்களுக்கு அமையவில்லை என்பது மட்டுமே காரணமாக கூற முடியும். இன்றும் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஆனால் எங்களது பயிற்சியில் எந்தவித குறையும் இல்லை. பல விமர்சனங்கள் வருகின்றன. ஆனால் நான் வீரர்களை பார்க்கிறேன். தங்களது 100 சதவீதம் ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர்.” என்றார்.