உலக கோப்பையில் செலக்ட் பண்ணலனா என்ன பண்ணுவிங்க? – லபுசேன் கூலா சொன்ன மாஸ் மேட்டர்!

0
655
Labuschagne

கிரிக்கெட் ஒரு வினோதமான விளையாட்டு. அது வீரர்களுக்கு எப்போது எதை தரும் என்று யாருக்கும் தெரியாது. அதேபோல்தான் வீரர்களிடமிருந்து எதை எப்பொழுது பறிக்கும் என்றும் யாருக்கும் தெரியாது.

உதாரணமாக விராட் கோலியை எடுத்துக் கொண்டால் அவர் ஒரு மூன்று வருடங்கள் சதம் அடிக்காமல், மெது மெதுவாக தேய்ந்து, ஒரே ஐபிஎல் தொடரில் மூன்று முறை கோல்டன் டக் அடிப்பார் என்று, அவரைப் பிடிக்காதவர்கள் கூட நினைத்திருக்க முடியுமா?

- Advertisement -

அதே சமயத்தில் ஒரு எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்து, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் தொடர்ந்து ஐந்து சிக்ஸர்கள் அடித்து, இன்று இந்திய டி20 அணியில் ரிங்கு சிங் இடம் பிடித்திருப்பது எவ்வளவு ஆச்சரியமான விஷயம்!

இதேபோல்தான் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் மார்னஸ் லபுசேன் கிரிக்கெட் வாழ்க்கையும் வினோதமானது. 2019 ஆம் ஆண்டு ஆசஸ் தொடரில் பந்து ஹெல்மெட்டில் தாக்கி ஸ்மித் காயம் அடைய, அவருக்கு பதிலாக களம் இறங்கி அற்புதமாக விளையாட, அவருக்கு அந்தத் தொடர் முழுக்க வாய்ப்பு கிடைத்து, ஆஸ்திரேலியா அணியின் ஒரு அங்கமாக மாறினார்.

இதேபோல் சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை ஆஸ்திரேலியா அணியில் அவருக்கு இடம் அளிக்கப்படவில்லை. இதற்கு முன்பாகவே அவருக்கு உலகக் கோப்பை அணியில் இடம் இல்லை என்பது அவருக்கு தெரிவிக்கப்பட்ட விஷயமாகவே இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் திடீர் என்று ஸ்மித் காயம் அடைய இவருக்கு தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இடம் கிடைக்கிறது. ஆனாலும் இவருக்கு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் அணியில் இடம் கிடைக்கவில்லை. அந்தப் போட்டியில் கேமரூன் கிரீன் பந்து ஹெல்மெட்டில் தாக்கி காயம் அடைய, அவருக்கு மாற்றாக விளையாட இவருக்கு வாய்ப்பு கிடைக்கிறது.

கிடைத்த வாய்ப்பில் வந்து அரை சதம் அடித்தவர், அணியை வெல்ல வைத்து ஆட்டநாயகன் விருது வென்றார். இதற்கு அடுத்து நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 99 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து அசத்தி இரண்டாவது ஆட்டநாயகன் விருதை தற்போது பெற்றிருக்கிறார். எனவே இவரை உலகக் கோப்பை ஆஸ்திரேலியா அணியில் சேர்க்க வேண்டும் என்ற பேச்சு உருவாகி இருக்கிறது.

இதுகுறித்து பேசி உள்ள மார்னஸ் லபுசேன் ” இப்படி ரன்களை எடுத்து அணி வெற்றி பெறுவது எப்பொழுதும் நல்ல விஷயமாக இருக்கிறது. ஆனாலும் என்னால் இந்த போட்டியில் இன்னும் ஒரு 30 ரன்கள் எடுத்திருக்க முடியும். இருந்தாலும் நீங்கள் திருப்தியாக இருக்க வேண்டும். என்னுடைய அணியில் துவக்க ஆட்டக்காரர்கள் மின்னல் வேகத் தொடக்கத்தை பெற்றார்கள். நாங்கள் விக்கெட்டை இழந்தாலும் கூட அதனால் எழுந்தோம்.

உலகக் கோப்பை அணிக்கு தேர்வாவது எனது கையில் கிடையாது. என்னுடைய கிரிக்கெட்டை விளையாடுவது மட்டும்தான் என்னுடைய வேலை. உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்தால் போய் உலகக் கோப்பையில் விளையாடுவேன். இல்லையென்றால் வீட்டிற்கு சென்று மகளைப் பார்ப்பேன். அவ்வளவுதான்!” என்று கூறியிருக்கிறார்!