கோலி இல்லை.. இந்தியாவின் டாப் 5 தலை சிறந்த பேட்ஸ்மேன் இவர்கள்தான்.. ரோகித் சர்மாவின் பழைய பேட்டியைக் கிளறிய ரசிகர்கள்

0
398

தற்போது இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்து கொண்டு இருக்கும் ரோகித் சர்மா 2021 ஆம் ஆண்டு ஹர்பஜன் சிங் உடன் நடைபெற்ற வீடியோ கால் உரையாடலில் தனது டாப் 5 இந்திய பேட்ஸ்மேன் பட்டியலை வெளியிட்டு இருக்கிறார். அதில் கவனிக்கப்படும் விஷயமாக விராட் கோலிக்கு இடமில்லை. அந்த ஐந்து வீரர்களைப் பட்டியலை இக்கட்டுறையில் காண்போம்.

1.சௌரவ் கங்குலி

- Advertisement -

கபில்தேவுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர் ‘கல்கத்தாவின் இளவரசர்’என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் சௌரவ் கங்குலி. இந்திய அணியில் இவரது வருகைக்குப் பின்னர்தான் இளம் வீரர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி இந்திய கிரிக்கெட் வளர்ச்சி பெற உதவியது. இடது கை ஆட்டக்காரரான இவர் வீரேந்திர சேவாக்கின் அதிரடியை கண்டறிந்து தனது தொடக்க இடத்தினை அவருக்காக வழங்கினார். ரோஹித் சர்மா போன்ற இளம் திறமைகளை வளர்ப்பதில் சிறந்த கேப்டனாகவும் இருந்தார்.

2.சச்சின் டெண்டுல்கர்

ரோகித் சர்மாவிற்கு அபிமான வீரர்களில் ஒருவர் சச்சின் டெண்டுல்கர். சச்சின் மீது ரோகித்திற்கு எப்போதும் ஒரு அளவு கடந்த மரியாதை உண்டு. ‘கிரிக்கெட்டின் கடவுள்’ என்று அழைக்கப்படும் சச்சின் இந்திய கிரிக்கெட்டின் அடையாளமாக திகழ்ந்தவர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சச்சினை தெரியும் என்பதால் இவரைப் பற்றிய தனி அறிமுகம் என்பது தேவையில்லை.

- Advertisement -

3.ராகுல் டிராவிட்

இந்திய கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் ராகுல் டிராவிட். இவர் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராகவும் செயல்பட்டு வருகிறார். ‘தி வால்’ என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட் டெஸ்ட் கிரிக்கெட்டில் இவர் ஏற்படுத்திய தாக்கம் அளப்பரியது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி விரைவாகத் தொடக்க விக்கட்டுகளை இழந்து விட்டால் சுவர் போல நின்று மேலும் விக்கெட்டுகள் விழாமல் தடுக்கவும், ரன்கள் சேகரிப்பதிலும் மிகச் சிறந்தவர். தற்போது இவரின் வழிகாட்டுதலும் ரோகித் சர்மாவின் கேப்டன்சியும் இந்திய அணியை மேன்மேலும் உயர்த்தி வருகிறது.

4.விவிஎஸ் லட்சுமணன்

இவரும் ராகுல் டிராவிடைப் போன்றே குறிப்பாக சவாலான சூழ்நிலைகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு வெற்றிகளைத் தேடி தந்தவர். டெஸ்டில் இவர் களம் இறங்கினால் ஆஸ்திரேலியா அணிக்கு எப்போதும் ஒருவித பதட்டம் கலந்த பயம் இருந்து கொண்டே இருக்கும் என்பது உண்மை. அந்த அளவிற்கு அழுத்தமான சூழ்நிலைகளில் மிகச் சிறப்பாக விளையாடக் கூடியவர். இவர் இந்திய அணிக்கு இட்டுச் சென்ற முத்திரை என்றும் அழியாது.

5.வீரேந்திர சேவாக்

இந்திய அணியில் அதிரடிக்கு பெயர் பெற்றவர் வீரேந்திர சேவாக். டெஸ்ட் கிரிக்கெட்,ஒருநாள் போட்டி மற்றும் டி20 என எதிலும் பாரபட்சமின்றி பவுலர்களை வெளுத்து வாங்குவதில் வல்லவர். இவர் களமிறங்கினால் இவர் சந்திக்கும் முதல் பந்து பெரும்பாலும் பௌண்டரி லைனையே தொடும்.

இவரது ஆக்ரோஷமான பேட்டிங் அணுகுமுறை உலகெங்கிலும் உள்ள பந்துவீச்சாளர்களை பிரமிக்க வைத்துள்ளது. அதனால் தான் என்னவோ ரோஹித் சர்மாவும் அவரது பாணியை பின்பற்றி அதிரடியாக விளையாடி வருகிறார். இவரது அச்சமற்ற அணுகுமுறை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது என்று கூட சொல்லலாம்.