“யாரும் இதை சொல்ல மாட்டாங்க நான் சொல்றேன்; இந்தியா இதனாலதான் ஐசிசி கோப்பையை வெல்லவில்லை” – கம்பீர் வெளிப்படையான பேச்சு!

0
5379
Gambhir

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு ஐசிசி தொடர்களில் இந்திய அணியின் தோல்வி தொடர்கதையாகி வருகிறது.

தற்பொழுது அது நடந்து முடிந்த இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் எதிரொலித்தது. இந்திய அணி போராடாமல் பரிதாபமாகத் தோற்று பட்டத்தை இழந்தது.

- Advertisement -

இந்திய அணி இப்படி ஐசிசி தொடர்களில் உலகக் கோப்பைகளை வெல்லாமல் இருப்பதற்கான காரணம் என்னவென்று கௌதம் கம்பீர் தன்னுடைய கருத்தை மிகவும் வெளிப்படையாக கூறி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசும் பொழுது
“ஒருவேளை இதை நிறைய பேர் சொல்ல மாட்டார்கள். ஆனால் இந்த உண்மை உலகத்திற்கு முன்னால் வரவேண்டிய உண்மை என்பதால் நான் இதைச் சொல்கிறேன்.

நம் நாடு அணியின் மீது வெறி கொண்ட நாடு கிடையாது. மாறாகத் தனிப்பட்ட வீரர்களின் மேல் வெறி கொண்ட நாடு. அணியை விட தனிப்பட்ட வீரர்களைப் பெரியதாக நினைக்கிறது. மற்ற இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் தனிப்பட்ட வீரர்களை விட அணிதான் பெரிதாகப் பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் பங்குதாரர்கள் முதல் ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஊடகங்கள் வரையிலும் இந்த இடத்தில் பி.ஆர் போலதான் செயல்படுகிறார்கள்.

அவர்கள் நாள் முழுவதும் மூன்று வீரர்களை மட்டுமே உங்கள் முன்னால் காட்டுவார்கள். நீங்கள் 50 ரன் எடுத்தால் நான் 50 ரன் எடுத்தால், நான்தான் நாள் முழுவதும் தொலைக்காட்சியில் காட்டப்படுவேன். ஒட்டுமொத்த பார்வையாளர்களும் நான்தான் பெரிய நட்சத்திரம் என்று நினைப்பார்கள். நீங்கள் தகுதி குறைந்த வீரராகப் பார்க்கப்படுவீர்கள்.

ஒரு வீரரைக் குறைத்து மதிப்பிடுவது யார்? ஒளிபரப்பாளர்களும், சமூக ஊடகங்களும், கிரிக்கெட் நிபுணர்களும் இதைச் செய்கிறார்கள். அவர்கள் நாள் முழுவதும் என்னைப் பற்றி பேசிவிட்டு, உங்களைப் பற்றி குறிப்பிடாமல் விட்டால், நீங்கள் தாமாகவே குறைத்து மதிப்பிடப்படுவீர்கள். இதனால் தனிநபர் மீது ரசிகர்கள் வெறித்தனமாக இருப்பதால்தான், இந்தியா ஐசிசி கோப்பைகளைத் தொடர்ந்து வெல்லவில்லை!” என்று கூறியிருக்கிறார்!