இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் கடந்த எட்டு ஆண்டுகளில் வளர்ந்து இருக்கக்கூடிய அளவு மிகப் பெரியது. இன்று அவர்கள் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ஒருநாள் மற்றும் டி20 உலக சாம்பியனாக இருக்கிறார்கள்.
2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தோற்று முதல் சுற்றில் வெளியேறினார்கள். இது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தை மிகப்பெரிய காயப்படுத்திய நிகழ்வாக அமைந்தது!
இதற்குப் பிறகு இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் ஒரு சிறப்பு குழு அமைத்து, 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு ஒரு புதிய இங்கிலாந்து அணியை தயார் செய்தது. அணியை மட்டும் தயார் செய்யவில்லை. புதிய அணுகு முறையையும் உருவாக்கியது.
இங்கிலாந்து தங்கள் பழைய கிரிக்கெட் கௌரவங்களை எல்லாம் விட்டு, எப்படி வேண்டுமானாலும் அடிக்கலாம், ஆனால் ரன்தான் தேவை என்கின்ற முடிவுக்கு வந்தது. மேலும் இங்கிலாந்து உள்நாட்டு கவுண்டி ஆடுகளங்கள் வரை பேட்டிங் செய்வதற்கு சாதகமாக மாற்றப்பட்டன.
இதன் எதிரொலி அவர்கள் தொடர்ந்து அதிரடியான ஆட்டங்களில் ஈடுபட்டார்கள். 2019 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையையும் வென்றார்கள். கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையையும் வென்றார்கள். அவர்கள் ஆல்ரவுண்டர்களை உருவாக்கி பேட்டிங் பலத்தை பெரிய அளவில் சேர்த்த விரும்புகிறார்கள். தற்பொழுது அவர்களால் 11 பேரும் பேட்டிங் செய்ய முடியும் அணியை களம் இறக்க முடியும்.
நேற்று சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 24 ரன்னுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து, இறுதி நேரத்தில் லிவிங்ஸ்டன் மற்றும் சாம் கரன் 112 ரன்கள் எடுத்து அசத்த, இங்கிலாந்து வெற்றி பெற்றது. லிவிங்ஸ்டன் ஆட்டம் இழக்காமல் 95 ரன்கள் எடுத்தார்.
லிவிங்ஸ்டன் குறித்து உலகக் கோப்பையை வென்ற முன்னாள் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் பேசும்பொழுது “அவரது ஆல்ரவுண்ட் திறமையின் காரணமாக, இந்த 50 ஓவர் அணியின் மிக முக்கியமான அங்கமாக இருக்கிறார். களத்தில் அவர் நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக இருக்கிறார். அவரால் விரல் மற்றும் மணிக்கட்டு என இரண்டு வகையான சுழற் பந்துவீச்சையும் வீச முடிகிறது. அவருடைய இந்த திறமை அவரை ஒவ்வொரு ஆட்டத்திற்கும் விளையாட வைக்கும் சான்றிதழை தருகிறது. அவர் இங்கிலாந்து அணிக்கு பெரிய வெற்றி வீரர்!” என்று கூறியிருக்கிறார்.
நேற்று ஆட்டநாயகன் விருது பெற்ற லிவிங்ஸ்டன் கூறும் பொழுது “எனது பந்துவீச்சில் சில விஷயங்களை மாற்றி இருக்கிறேன். அதனால் கொஞ்சம் வித்தியாசமாக தெரிகிறது. இதில் நான் இன்னும் வளர்ச்சி கட்டத்தில்தான் இருக்கிறேன். நான் மூன்று வாரங்களுக்கு முன்பாகத்தான் மாற்றம் செய்தேன். அதனால் நான் இன்னும் சிறப்பாக தயாராகி வருவேன்!” என்று கூறியிருக்கிறார்!