தோத்துட்டோம் அதனால என்ன?.. முதல் இன்னிங்சில் டிக்ளேர் செய்ததை நினைத்து எனக்கு துளியும் வருத்தமில்லை! – பென் ஸ்டோக்ஸ் நம்பிக்கை பேட்டி!

0
4844

“தோல்வியுற்றப்பின், முதல் இன்னிங்ஸ் டிக்ளேர் செய்ததை நினைத்து துளியும் வருத்தமில்லை.” என இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டியளித்துள்ளார்.

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து 393 ரன்கள் அடித்திருந்தது. எட்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த நிலையில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டிக்ளர் செய்கிறேன் என அறிவித்தார். அதன் பிறகு பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்கில் 386 அடித்து ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி சற்று தடுமாற்றத்துடன் விளையாடி 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மொத்தம் 280 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. 281 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணி நான்காம் நாள் முடிவில் மூன்று முக்கியமான விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது.

போட்டியின் கடைசி நாளில் முதல் செஷன் மழை காரணமாக முற்றிலும் தடைப்பட்டுவிட்டது. மீதம் இருக்கும் நேரத்தில் மொத்தம் 67 ஓவர்கள் மட்டுமே வீசப்படும் என நடுவர்கள் அறிவித்திருந்தனர். அதற்குள் 174 ரன்களை ஆஸ்திரேலிய அணி அடிக்க வேண்டும். இங்கிலாந்து அணி வெற்றிபெற ஏழு விக்கெட் கைப்பற்ற வேண்டும் என இருந்தது.

மொத்தம் 8 விக்கெட்டுகளை இங்கிலாந்து அணி கைப்பற்றிவிட்டது. கடைசி இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டியது இருந்தது. ஆஸ்திரேலியா அணி 54 ரன்கள் அடிக்க வேண்டியது இருந்தது. கேப்டன் கம்மின்ஸ் கடைசிவரை உள்ளே நின்று அவர் மட்டுமே 44 ரன்கள் அடித்து வெற்றியை உறுதி செய்தார். இவருக்கு பக்கபலமாக நேதன் லையன் இருந்தார்.. இறுதியாக ஆஸ்திரேலியா இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்த இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில்:

“போட்டியை கடைசி வரை எடுத்து சென்று போராடியதை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். மற்றுமொரு தலைசிறந்த டெஸ்ட் போட்டியில் ஒரு அங்கமாக இருந்திருக்கிறோம். இந்த போட்டியில் ரசிகர்கள் சீட்டின் நுனிக்கு வந்து பரபரப்பாக என்ன நடக்கும்? என்று ரசிக்கவில்லை என்றால் மட்டுமே நான் ஆச்சரியமாக உணர்வேன். அப்படி ஒரு கிரிக்கெட்டை இந்த ஐந்து நாட்களும் வெளிப்படுத்தினோம். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ரசிகர்கள் அனைவரும் தவறாமல் ஆசஸ் டெஸ்ட் தொடரை கண்டுகளிக்க இதுவொரு காரணமாகும்.

தோல்வி என்பது தோல்விதான். ஆனாலும் தொடர்ந்து இதேபோல அணுகுமுறையை மட்டுமே வெளிப்படுத்துவோம். தொடர்ந்து ஆஸ்திரேலியா அணிக்கு அழுத்தம் கொடுப்பதை மாற்றிக்கொள்ள மாட்டோம். அந்த குறிப்பிட்ட சூழலில் என்ன முடிவுகளை எடுக்க வேண்டுமோ, அதற்கு ஏற்றவாறு சரி என்று படும் முடிவுகளை எடுப்போம்.

முதல் இன்னிங்சில் டிக்ளேர் செய்ததை நினைத்து எனக்கு துளியும் வருத்தம் இல்லை. ஆண்டர்சன் களத்தில் இறங்கி 20 நிமிடம் பேட்டிங் செய்வது என்பது அவ்வளவு எளிதல்ல. ஆகையால் ஆஸ்திரலியா மீது அழுத்தம் கொடுத்து சான்ஸ் எடுக்கலாம் என நினைத்தேன். ரூட் மற்றும் ஆண்டர்சன் இருவரும் விரைவாக ஆட்டமிழந்திருக்கவும் வாய்ப்புள்ளதே. யார் அறிவர்?. ஆகையால் நாங்கள் எடுத்த முடிவில் எந்தவித வருத்தமும் எங்களுக்கு இல்லை.

நேற்று நான்காம் நாளில் பேட்டிங் மற்றும் இன்று கடைசி நாளில் பவுலிங் என ஜோ ரூட் இந்த போட்டி முழுவதுமே மிகச் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். ஆஸ்திரேலியா அணிக்கு பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும். போட்டி முழுவதும் தங்களது திட்டத்தில் இருந்து மாற்றாமல் பிடித்தமாக ஒரே நோக்கத்தில் இருந்தார்கள். நேற்றைய தினம் இரண்டாம் பாதியில் மற்றும் இன்று முழுவதும் ராபின்சன் மற்றும் பிராட் இருவரும் நன்றாக அழுத்தம் கொடுத்தார்கள். கடைசி வரை நாங்கள் போராடிய நினைத்து பெருமை கொள்கிறேன்.” என்றார்.