இன்று பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டி இந்திய அணிக்கு எந்தவித விளைவையும் ஏற்படுத்தாது என்கின்ற காரணத்தினால், கடந்த போட்டியில் இருந்து இந்த போட்டிக்கு ஐந்து வீரர்களை மாற்றி, இந்திய அணி நிர்வாகம் விளையாட வைத்தது.
மிகக்குறிப்பாக உலகக் கோப்பைக்கு அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியில் இடம்பெறாத திலக் வர்மா மற்றும் பிரசித்தி கிருஷ்ணா இருவருக்கும் விளையாட வாய்ப்பளிக்கப்பட்டது.
இதில் திலக் வர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. பேட்டிங் யூனிட்டில் விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. பவுலிங் யூனிட்டில் பும்ரா, சிராஜ் மற்றும் குல்தீப் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது.
முதலில் விளையாடிய பங்களாதேஷ் அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் சேர்த்தது. கேப்டன் ஷகிப் அல் ஹசன் 80 ரன்கள் எடுத்தார். பங்களாதேஷ் அணியின் இறுதிக்கட்ட பேட்ஸ்மேன்களை இந்திய பந்துவீச்சாளர்களால் கட்டுப்படுத்த முடியாதது, பிரச்சனையாக அமைந்தது.
தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களில் ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காத போது, மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் சதம் அடித்தார். இறுதியில் அக்சர் படேல் போராடினாலும் அது வெற்றிக்கு போதுமானதாக அமையவில்லை. முடிவில் இந்திய அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் பரபரப்பான போட்டியில் தோல்வியடைந்தது.
இந்த நிலையில் போட்டி முடிவுக்கு பின்னால் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா “நாங்கள் அணியின் சில வீரர்களுக்கு தொலைநோக்காக விளையாடுவதற்கு நேரம் கொடுக்க நினைத்தோம். இந்த விளையாட்டை நாங்கள் எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எப்பொழுதும் போல் நாங்கள் வெற்றிக்கு விளையாடினோம்.
உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்புள்ள வீரர்களுக்கு தற்சமயம் விளையாடுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நினைத்தோம். அக்சர் படேல் அற்புதமாக விளையாடினார் ஆனால் முடிக்க முடியவில்லை. ஆனால் இதற்கான பெருமை பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களுக்கே சேரும்.
கில்லின் சதம் பிரமாதமாக இருந்தது. அவர் தன்னை நம்புகிறார். அவருக்கு எப்படி விளையாட வேண்டும் என்று தெரியும். அவர் விரும்பும் விளையாட்டை விளையாடுகிறார். அவர் அனிக்காக என்ன செய்ய முடியும் என்பதில் தெளிவாக இருக்கிறார். கடந்த ஒரு வருடத்தில் மிகச் சிறந்த பார்மில் இருக்கிறார். மிகவும் கடினமாக உழைக்கக் கூடியவர்!” என்று கூறியிருக்கிறார்!