ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி தங்கம் வென்றதைத் தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி குறித்து இந்திய முன்னாள் தொடக்க வீரர் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
நாகோயாவில் நடைபெற்ற இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இறுதிப்போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 211 ரன்கள் குவித்தது. அதன்பின் இலக்கை நோக்கிய பாகிஸ்தான் அணியை கட்டுப்படுத்தி, 19 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
பவர்ப்ளே ஓவர்களில் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்த இந்திய பிளேயர்களின் ஆட்டம், போட்டியை இந்தியாவின் பக்கமாக மாற்றியது. கடைசி நேரத்தில் பிளேயர்கள் காட்டிய அதிரடி காரணமாக இந்திய அணி 200 ரன்களைத் தாண்டி வெற்றி இலக்கை நிர்ணயித்தது.
இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசும்போது, “நாங்கள் 10-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தோம், இப்போது அது 11 ஆக இருக்கும். காலையில் எழுந்திருக்கிறோம், பாகிஸ்தானை தோற்கடிக்கிறோம், இரவில் நிம்மதியாக தூங்குகிறோம் என்ற அளவில் தான் இப்போது நிலைமை இருக்கிறது.” என்று கூறி இருக்கிறார்.
மேலும் தொடர்ந்து பேசும்போது, “அபிஷேக் சர்மா மீண்டும் தான் ஏன் ஒரு ஸ்பெஷல் பிளேயர் என்பதை நிரூபித்துள்ளார். எப்போதாவது ஒருமுறை பேட் பார்ம் வந்தாலும் கூட, நீங்கள் அவருடன் நிற்க விரும்புவீர்கள். ஏனென்றால் அவர் அந்த அளவுக்கு ஒரு சிறந்த பிளேயர். அவர் தொடர்ந்து ரன்களை அடிக்கிறார், இந்த முறை மனதார அடித்து நொறுக்கினார். திலக் வர்மாவிற்கு பாகிஸ்தானை அடித்து நொறுக்குவது மிகவும் பிடிக்கும். ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியிலும் அதைச் செய்தார், இங்கேயும் செய்தார். அவர் தான் சந்தித்த கடைசி 11 பால்களில் 38 ரன்கள் அடித்தார்.” என்று கூறி இருக்கிறார்.






