ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய லெக் ஸ்பின்னர் ரவி பிஷ்னோயின் சுமாரான பௌலிங் செயல்பாடு குறித்து முன்னாள் இந்திய கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாகோயாவில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கம் வென்றபோதிலும், ரவி பிஷ்னோய் வீசிய 3 ஓவர்களில் விக்கெட் எதுவும் இன்றி 44 ரன்களை விட்டுக்கொடுத்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஸ்ரீகாந்த் பேசும்போது, “ஒரு டர்னிங் விக்கெட்டிலும் பந்தை திருப்ப முடியாவிட்டால் அவர் என்ன மாதிரியான ஸ்பின்னர்? ரவி பிஷ்னோயைப் பொறுத்தவரை, அவருடைய பாடி மட்டுமே டர்ன் ஆகிறது, பந்து ஒருபோதும் டர்ன் ஆவதில்லை. ரேங்க் டர்னராக இருக்கும் பிட்சிலும் பந்தை திருப்ப முடியாத ஒரே லெக் ஸ்பின்னர் இவர்தான். ஒரு இன்ச் கூட அவர் பந்தை திருப்பவில்லை. இது எப்படி சாத்தியம்? பிஷ்னோயிடம் இது ஒரு தனி கலை.” என்று கூறி இருக்கிறார்.
மேலும் தொடர்ந்து பேசும்போது, “மக்கள் அவரைத் தொடர்ந்து ஹைப் பண்ணிக்கொண்டே இருக்கிறார்கள். ஏதேனும் ஒரு இன்னிங்ஸில் அவர் நன்றாகப் பௌல் செய்துவிட்டால், மீண்டும் ஃபார்முக்கு வந்துவிட்டார் என்பார்கள், ஆனால் அடுத்த 10 இன்னிங்ஸ்களில் ஃபெயில் ஆவார். ஒரு லெக் ஸ்பின்னர் முதலில் பந்தை டர்ன் செய்ய வேண்டும். பாகிஸ்தானின் சாதாரண ஸ்பின்னர்கள் கூட பந்தை திருப்புகிறார்கள், அபிஷேக் சர்மா கூட பந்தை ஸ்பின் செய்தார்.” என்று கூறி இருக்கிறார்.
இறுதியாக பிஷ்னோயின் பௌலிங் குறித்து பேசும்போது, “பிஷ்னோய் பௌலிங் செய்தபோதுதான் பாகிஸ்தான் அணிக்கு ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கையே வந்தது. அவர் பௌலிங் செய்யும்போது பாகிஸ்தான்காரர்கள் பயப்படவில்லை, இந்தியர்கள்தான் பயப்படுகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு டர்னிங் விக்கெட்டில் வேறு யாராலும் ஓவருக்கு 14 ரன்கள் கொடுக்க முடியாது. ஒரு ரேங்க் டர்னரில் இவ்வளவு ரன்களை விட்டுக்கொடுக்க ரவி பிஷ்னோயால் மட்டுமே முடியும். தகுதியான மற்ற ஸ்பின்னர்களுக்கு வாய்ப்பு கிடைக்க இவரை அணியை விட்டு வெளியேற்ற வேண்டும்.” என்று கூறி இருக்கிறார்.






