“என்ன பண்றது கோலிக்கு ஈஸியா ரன் எடுத்தா பிடிக்காது.. எல்லாரும் எச்சரிக்கையா இருந்துக்கோங்க!” – கவாஸ்கர் தடாலடி பேச்சு!

0
7382
Gavaskar

சொந்த நாட்டில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான பயணத்தை மிகப்பெரிய அணியான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி பெற்று மிகவும் நம்பிக்கையுடன் ஆரம்பித்திருக்கிறது இந்திய அணி!

நேற்று இந்திய அணி பந்துவீச்சில் எந்த அளவிற்கு சிறப்பாக செயல்பட்டதோ அதே அளவிற்கு ஃபீல்டிங்கிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டது. வழக்கமாக இந்திய அணி கிரவுண்ட் ஃபீல்டிங் நன்றாக செய்தாலும் கூட, கேட்ச் எடுப்பதில் எப்பொழுதும் தடுமாறியே வந்தது. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் எல்லா வாய்ப்புகளையும் சிறப்பாக எடுத்தது.

- Advertisement -

நேற்று இந்திய அணிக்கு பந்து வீசிய அனைத்து பந்துவீச்சாளர்களும் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார்கள். மேலும் எல்லா பந்துவீச்சாளர்களும் ஹர்திக் பாண்டியா தவிர சிக்கனமாக இருந்தார்கள். குறிப்பாக இந்தியாவின் உலகத்தரமான மூன்று சுழற் பந்துவீச்சாளர்களும் ஒரு போட்டியில் இடம் பெற்றால் என்ன நடக்கும் என்பதை காட்டினார்கள்.

பேட்டிங் என்று வரும் பொழுது நேற்று இந்திய அணிக்கு ஒரு எச்சரிக்கை மணி அடித்ததாகவே எடுத்துக் கொள்ளலாம். டாப் ஆர்டர்கள் முக்கிய போட்டிகளில் எப்படி போட்டியை எதிர்கொள்ள வேண்டும் என்பது நேற்று தெரிந்திருக்கும். இந்த வகையில் இதுவுமே இந்திய அணிக்கு நல்ல விஷயமாகவே அமைந்திருக்கிறது.

மேலும் இந்திய அணியின் டாப் ஆர்டர்கள் சொதப்பினாலும் கூட, மூன்றாவதாக வந்த விராட் கோலி மற்றும் ஐந்தாவது ஆக வந்த கேஎல்.ராகுல் இருவரும் வெளிப்படுத்திய ஆட்டம் இந்திய அணிக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது. இந்திய அணி மொத்த தொடருக்கும் இந்த நம்பிக்கையை எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கலாம்.

- Advertisement -

நேற்றைய போட்டி குறித்து பேசி உள்ள சுனில் கவாஸ்கர் “விராட் கோலி அழுத்தத்தை ரசிக்கிறார் மேலும் அவருக்கு எளிதான ரன்கள் எடுக்க பிடிப்பது இல்லை. நீங்கள் அழுத்தத்தில் இருக்கும் பொழுது எடுக்கும் ரன்கள் மிகவும் மதிப்பு வாய்ந்தது. எனவே அழுத்தத்தை ரசிப்பது மிகவும் முக்கியமான அம்சமாகும். அதிர்ஷ்டம் தேவைப்படாத பேட்ஸ்மேன்கள் யாரும் கிடையாது.

ஆனால் அந்த அதிர்ஷ்டம் உங்கள் வழிக்கு வந்தவுடன் அதை எப்படி பணமாக மாற்றுகிறீர்கள்? என்பதுதான் முக்கியம். விராட் கோலி அதில் மிகவும் திறமையானவர். நேற்று அவர் 85 ரன்கள் அவுட் ஆனது ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் ரன்களை சதமாக மாற்ற அவரைப் போன்று வேறு யாருமே கிடையாது.

இந்தியா நேற்று காட்டியது என்னவென்றால் தங்களால் எந்த நிலையில் இருந்தும் மீண்டு வர முடியும் என்பதைதான். நேற்று பார்த்த போட்டி மிகவும் ஈர்க்கக் கூடியது. இது ஒட்டுமொத்த ஆல்ரவுண்டர் செயல் திறன். இந்தியாவின் மிகச் சிறந்த செயல் திறன். எனவே இந்தியாவின் நம்பிக்கை நிலை உயரும். இதை மற்ற அணிகள் கவனிக்க வேண்டும்.

கேஎல் ராகுல் இன்னிங்ஸையும் மறந்து விடக்கூடாது. நேற்று அவர் பேட்டிங்கில் எந்த ஒரு இடத்திலும் சின்ன தவறு கூட செய்யவில்லை. அவருக்கு இருக்கும் திறமை நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். அவர் தற்போது பேட்டிங் செய்யும் இடம் இந்தியாவுக்கு நல்ல ஒன்றாக இருக்கும். ஐந்தாவது இடத்தில் இருக்கும் ஒருவர் ஆட்டத்தை எப்பொழுதும் தன் வசம் வைத்திருக்க முடியும்!” என்று கூறியிருக்கிறார்!