ஆணவமோ திமிரோ இல்ல.. இந்த விஷயத்துக்கு எனக்கு மெசேஜ் பண்ணாதிங்க – கேஎல்.ராகுல் வெளிப்படையான அறிவிப்பு!

0
3141
Rahul

இந்திய அணி தற்பொழுது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கு இந்திய நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆஸ்திரேலியா தொடருக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணிக்கு முதல் இரண்டு போட்டிகளுக்கு கேஎல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஒரு கிரிக்கெட் வீரராக கேஎல்.ராகுல் கிரிக்கெட் வாழ்க்கையில் காயம் என்பது தொடர்கதையாகவே இருந்து வந்திருக்கிறது. இந்த வருட ஐபிஎல் தொடரில் காயமடைந்த அவர் உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பெறுவாரா? என்பது பெரிய கேள்வி குறியாக இருந்தது.

இந்த நிலையில் மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்ற அவர், ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக மிக முக்கியமான போட்டியில், அணிக்குள் எதிர்பாராத வாய்ப்பை பெற்ற உடனேயே சதம் அடித்து தன்னுடைய திறமையை நிரூபித்தார்.

இந்த நிலையில் தற்போது விக்கெட் கீப்பர் பணியையும் மற்றும் கேப்டன்சியும் செய்து வருகிறார். தற்பொழுது அவர் சில முக்கியமான விஷயங்கள் குறித்து மிக வெளிப்படையாகவே பேசி இருக்கிறார்.

- Advertisement -

கேஎல்.ராகுல் பேசும் பொழுது “நான் ஆசியக் கோப்பையில் விளையாடியதை எல்லோரும் பார்த்தார்கள். நான் பேட் செய்தது உடன் விக்கெட் கீப்பிங் சேர்த்து செய்தேன். எனவே எனது உடல் தகுதி குறித்து அக்கறை கொண்டிருந்தவர்களுக்கு நான் எப்படி இருக்கிறேன் என்று தெரிந்திருக்கும். அடுத்த இரண்டு மாதங்கள் நான் இப்படியே தொடர்வேன் என்று நம்புகிறேன்.

நான் எப்போது அணிக்கு திரும்புவேன் என்று எனக்கு நன்றாகவே தெரியும். நான் விக்கெட் கீப்பிங் சேர்த்து செய்ய வேண்டும் என்பதும் தெரியும். எனக்கு மொத்தமாக சவால்கள் அதிகம். எனவே இதற்காக உடல் தகுதியில் மிகக் கடுமையாக உழைத்தேன். கிரிக்கெட் வீரர்களாகிய நாங்கள் களத்தில் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை நன்றாக அறிவோம். நாங்கள் அதற்காக எங்களுடைய பயிற்சி அமர்வில் கடுமையாக உழைப்போம்.

நான் என் வாழ்நாள் முழுவதும் தொடக்க ஆட்டக்காரராகவே இருந்திருக்கிறேன். தொடக்க ஆட்டக்காரர்கள் ஒரு ஆட்டத்தை அமைக்கிறார்கள். அவர்களுக்கு பெரும்பாலும் இலக்கு, ரன் ரேட் என்று எதுவும் கிடையாது. ஆனால் மிடில் ஆர்டர் என்பது வேறு. இரண்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. நான் மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கு ஏற்கனவே ஆட்டங்களை பெற்றிருந்தது மகிழ்ச்சியான விஷயம்.

மேலும் உலகக் கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட்டுகளுக்காக எனக்கு யாராவது மெசேஜ் செய்தால் நான் அதற்கு பதில் அளிக்க போவதில்லை. இது ஆணவமோ திமிரோ கிடையாது. நான் இதிலிருந்து எல்லாம் விலகி என்னுடைய ஆட்டத்தில் கவனம் செலுத்தப் போகிறேன். எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஒரு செய்தி, நீங்கள் டிக்கெட்டுக்காக எனக்கு மெசேஜ் அனுப்புவீர்கள் என்றால், தயவு செய்து வேண்டாம்!” என்று கூறியிருக்கிறார்!