“உங்களுக்கு எல்லாமே தெரியும்னு நினைக்காதிங்க.. காசு கூட ஆணவமும் வருது” – இந்திய அணி வீரர்களை சரமாரியாக தாக்கிய கபில் தேவ்!

0
337
Kapil Dev

இந்திய கிரிக்கெட்டின் லெஜன்ட் வீரர் கபில்தேவ் தொடர்ச்சியாக இந்திய அணி நிர்வாகத்தின் மீதும் வீரர்கள் மீதும் தன்னுடைய கடுமையான கருத்தை முன் வைத்துக் கொண்டே வருகிறார். இந்த வகையில் நேற்றிலிருந்து அவர் கருத்துகள் மிக வெப்பத்தை கிளப்ப கூடியதாக அமைந்திருக்கிறது!

தற்போதைய இந்திய வீரர்களின் திறமை மற்றும் அவர்களுடைய கிரிக்கெட் அணுகுமுறைகள் குறித்து கபில்தேவ் தன்னுடைய கருத்துக்களை மிக மிக வெளிப்படையான முறையில் பேசி வருகிறார். இறுதியாக டி20 உலக கோப்பைக்கு முன்பாக ரோஹித் சர்மா இதற்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயம் உருவானது.

- Advertisement -

மீண்டும் கபில்தேவ் அதே முறையில் பேச ஆரம்பித்திருக்கிறார். நேற்று ஹர்திக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட் விளையாடாதது குறித்து பேசிய கபில்தேவ் ” ஹர்திக் பாண்டியா நிறைய உழைத்தால் முடியாதது கிடையாது. நாங்கள் விளையாடும் போது கிரிக்கெட் மட்டுமே இருந்தது. இப்பொழுது விளம்பரங்களும் சேர்த்து இருப்பதால் வீரர்களுக்கு நிறைய பணிச்சுமை சேர்ந்து விட்டது” என்று தாக்கி இருந்தார்.

தற்போது இந்திய வீரர்கள் எப்படியான மனநிலையில் இருக்கிறார்கள் என்று பேசிய கபில்தேவ் “நிறைய வாய்ப்புகள் மற்றும் பணம் கிடைக்கிறது. இதனால் நிறைய வித்தியாசங்கள் உருவாகியிருக்கிறது. இது நல்ல விஷயம்தான். அதே சமயத்தில் இதில் ஒரு நெகட்டிவான விஷயம் இருக்கிறது. அது என்னவென்றால் இவர்கள் நம்பிக்கையுடன் இருப்பது மட்டுமல்லாமல் இவர்கள் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்பது போல் இருக்கிறார்கள். இவர்கள் யாரிடமும் எதையும் கேட்க வேண்டியதில்லை என்று நினைக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு வெளியில் இருந்து விஷயங்கள் தேவைப்படுகிறது. இதை இதைவிட எப்படி சிறப்பாக சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.

சில சமயம் நிறைய பணம் வரும். அதன் கூடவே சேர்ந்து ஆணவமும் வரும். தற்போதைய வீரர்கள் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறார்கள். இதுதான் வித்தியாசம். இங்கு எத்தனையோ வீரர்களுக்கு வெளியில் இருந்து உதவி தேவைப்படுகிறது என்று நான் உறுதியாக சொல்வேன்.

- Advertisement -

இங்கு கவாஸ்கர் இருக்கிறார். அவரிடம் கேட்டு தெரிந்து கொள்வதில் என்ன பிரச்சனை? ஈகோவா? ஆனால் இதில் எந்த ஈகோவும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. நாம் நன்றாக இருக்கிறோம் என்று அவர்கள் நினைக்கிறார்கள் அதுதான் பிரச்சனை. இவ்வளவு மூத்த அனுபவம் வாய்ந்த பல போட்டிகளை பார்த்த வீரர்கள் உங்களிடம் இருக்கிறார்கள். அவர்களின் அனுபவமும் ஆலோசனையும் உங்களுக்கு நிச்சயம் தேவைப்படும். சில சமயங்களில் உங்களுக்கு அது எல்லாவற்றையும் மாற்றி நல்லதை உண்டாக்கும்” என்று கூறியிருக்கிறார்.

சில வாரங்களுக்கு முன்பு இதே விஷயத்தை பேசி இருந்த கவாஸ்கர்
“இல்லை ஆலோசனை கேட்டு யாரும் வரவில்லை. முன்பு ராகுல் டிராவிட், சச்சின் மற்றும் லட்சுமணன் ஆகியோர் அடிக்கடி என்னிடம் வருவார்கள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையுடன் என்னை அணுகுவார்கள். நான் கவனித்த விஷயங்களை அவர்களிடம் சொல்வேன். இப்பொழுது உள்ளவர்களிடம் தேடி சென்று சொல்வதற்கு எனக்கு எந்த ஈகோவும் கிடையாது. அதே சமயத்தில் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் ஆகியோரின் திட்டங்களை நான் குழப்ப வேண்டாம் என்று தலையிடுவது இல்லை!” என்று கூறியிருந்தார்!