நியூசிலாந்து அணி தங்களது சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றி இருக்கிறது.
இந்த தொடரில் இதற்கு முன்பாக நடைபெற்ற இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணி வென்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி இருந்தது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற மூன்றாவது ஆறுதல் வெற்றி பெறுவதற்கு இங்கிலாந்து கடுமையாக போராடி தோற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து அணிக்கு ஜேமி ஸ்மித் 5, டக்கெட் 8, ரூட் 2, கேப்டன் ஹாரி புரூக் 6, ஜேக்கப் பெத்தேல் 11 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேற 45 ரன்னுக்கு இங்கிலாந்து 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.
இதை தொடர்ந்து கீழ் வரிசையில் வந்த முன்னாள் கேப்டன் ஜோஸ் பட்லர் 56 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ஜேமி ஓவர்டன் சிறப்பாக விளையாடி 62 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக இங்கிலாந்து அணி 40.2 ஓவர்களில் ஆல் அவுட் ஆனாலும் கவுரவமாக 222 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் டிக்னர் நான்கு விக்கெட் வீழ்த்தினார்.
இதற்கடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் கான்வே 44 பந்தில் 34 ரன்கள், ரச்சின் ரவீந்தரா 37 பந்தில் 46 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார்கள். அடுத்து டேரில் மிட்சல் 68 பந்தில் 44 ரன்கள், கேப்டன் சான்ட்னர் 29 பந்தில் 27 ரன் எடுத்தார்கள்.
இதையும் படிங்க : என் அனுபவத்துல சொல்றன்.. கம்பீர் டீம் செலக்சன் தப்பு.. இது பொறுப்பில்லாம போயிடும் – ஆரோன் பின்ச் விமர்சனம்
இதைத்தொடர்ந்து சில விக்கெட்டுகள் விழ நியூசிலாந்து அணிக்கு இரண்டு விக்கெட்டுகள் கைவசம் இருக்க 27 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. இந்த நிலையில் சிறப்பாக போராடிய பந்துவீச்சாளர்கள் டிக்னர் 20 பந்தில் 18 ரன், போல்க்ஸ் 24 பந்தில் 14 ரன் என ஆட்டம் இழக்காமல் எடுத்து, இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வெற்றி பெற வைத்தார்கள். தற்போது இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட் விளையாடுவதற்கு விருப்பம் இல்லாமல் விளையாடுவது போல இருக்கிறது. அவர்களால் இந்த வடிவத்தில் ஆப்கானிஸ்தான் அணியை கூட வெல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.