நெட் பவுலர் டு மேன் ஆஃப் தி மேட்ச்; புற்றுநோயால் இழந்த என் தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன் – மோகித் சர்மா உருக்கம்!

0
371
Mohit Sharma

நேற்று, கொல்கத்தா அணிக்கு எதிராக, ஒரு எதிர்பாராத தோல்விக்கு பிறகு குஜராத் அணி பஞ்சாப் அணிக்கு எதிராக மொகாலி மைதானத்தில் விளையாடிய போட்டியில் கடைசி ஓவரில் வெற்றி பெற்றது!

கொல்கத்தா அணிக்கு எதிராக கடைசியாக நடந்த போட்டியில் ரிங்கு சிங் குஜராத் வேகபந்துவீச்சாளர் யாஸ் தயால் ஓவரில் கடைசி ஐந்து பந்துகளுக்கு ஐந்து சிக்ஸர் அடித்து வெல்ல வைத்தார். இது குஜராத் அணியின் வெற்றி பயணத்துக்கு தடை போட்டதோடு, அவர்களது ஆட்ட அணுகு முறையில் கொஞ்சம் நம்பிக்கை இன்மையையும் ஏற்படுத்தி விட்டது.

- Advertisement -

இந்த நிலையில் நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணியில் யாஷ் தயால் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக மூத்த இந்திய வேகப்பந்துவீச்சாளர் மோகித் சர்மா சேர்க்கப்பட்டார். பத்து ஓவர் கழித்து பந்து வீச வந்த இவர், ஐபிஎல் தொடரில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு விளையாடும் வாய்ப்பை பெற்றார். ஆனால் மிகச் சிறப்பாக பந்துவீசி நான்கு ஓவர்களுக்கு 18 ரன்கள் மட்டும் தந்து இரண்டு விக்கட்டுகளையும் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

2013ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடும் இவரை 2018 ஆம் ஆண்டு பஞ்சாப் அணி 2.40 கோடிக்கு வாங்கியது. அடுத்த வருடம் சென்னை அணி ஐந்து கோடிக்கு வாங்கியது. அதற்கடுத்த வருடம் டெல்லி அணியால் 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டார். 2021 மற்றும் 2022 என இரண்டு வருடங்கள் இவருக்கு ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தக் காலகட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் வலைப்பந்துவீச்சாளராக இருந்தார். ஆனால் இந்த ஆண்டு மினி ஏலத்தில் இவரை குஜராத் அணி 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதோடு வாய்ப்பும் தர, பந்துவீச்சில் அசத்தி ஆட்டநாயகன் விருதை பெற்றிருக்கிறார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற பிறகு பேசிய மோகித் சர்மா ” ஆசிஷ் பாய் என்னிடம் வந்து நான் இன்று விளையாடப் போகிறேன் என்று கூறிய பொழுது அது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணமாக இருந்தது. நான் மூன்று வருடங்களுக்கு பிறகு வந்து பந்து வீசப் போகிறேன். இந்தக் காலகட்டத்தில் புற்றுநோயால் என் தந்தையை இழந்து விட்டேன். நாம் திரும்பி வருவதை நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள் பார்க்க வேண்டும் என்று விரும்புவார்கள். எனவே நான் இந்த விருதை என் தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன் என்று உருக்கமாகக் கூறியிருக்கிறார்!

- Advertisement -

நேற்று ஆட்டம் முடிந்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் மோகித் சர்மா வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இருந்து, தனக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும் வரை காத்திருந்து, கிடைத்த வாய்ப்பில் இப்படி சிறப்பாக செயல்பட்டது மிகவும் பாராட்டுக்குரியது. இது விழுங்குவதற்கு மிகவும் கடினமான மாத்திரை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது!