“எங்கம்மா கடன் வாங்கி கஷ்டப்பட்டு என்னை விளையாட வச்சாங்க” – அறிமுகப் போட்டியில் ரிங்கு சிங் உணர்ச்சிகரமான பேட்டி.!

0
215

இந்திய அணி அயர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது போட்டி நேற்று நடைபெற்றது . மழையால் தடைபட்ட இந்த ஆட்டத்தில் இந்தியா இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் டி/எல் முறையில் வெற்றி பெற்றது .

நேற்றைய போட்டியில் இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாட அறிமுகமானார் ரிங்கு சிங். உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்த வருட ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார் . கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ஒரு ஓவருக்கு 31 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 5 சிக்ஸர்களை அடித்து தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

- Advertisement -

இந்த ஒரு போட்டியின் மூலம் பிரபலமான ரிங்கு சிங் 2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடர் முழுவதும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு நல்ல ஃபினிஷராக செயல்பட்டார். இக்கட்டான சூழ்நிலைகளிலும் பதற்றமில்லாமல் விளையாடும் இவரது ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களையும் கவர்ந்தது. இவரை இந்திய டி20 அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வந்த நிலையில் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

மேலும் நேற்று நடைபெற்ற முதல் போட்டியிலேயே இந்திய அணிக்காக அறிமுகமானார் ரிங்கு சிங் . இந்தப் போட்டி மழையால் தடைபட்டதால் இவருக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. போட்டி முடிந்த பிறகு ஜியோ சினிமா சேனலில் கிரிக்கெட்டிற்காக பட்ட கஷ்டங்கள் மற்றும் இந்தக் காலங்களில் தனது தாய் எவ்வாறு தன்னுடைய கனவை நினைவாக்குவதற்காக போராடினார் என்பதை உருக்கமாக தெரிவித்து இருக்கிறார் ரிங்கு சிங்.

இதுகுறித்து பேசி இருக்கும் அவர் ” எனது குடும்பம் மிகவும் வறுமையான குடும்பம் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற எனது கனவை நினைவாக்குவதற்காக அதிகமான பொருளாதார சுமைகளை எனது குடும்பம் சமாளிக்க வேண்டி இருந்தது. அவர்கள் பட்ட கஷ்டம் தான் எனக்கு கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தையும் கொடுத்தது . மேலும் எல்லோரும் ஐபிஎல் விளையாடுகிறார்கள் ஆனால் நீ இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று எனது பெற்றோர் என்னை ஊக்குவித்தனர்” என தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் இது தொடர்பாக பேசிய ரிங்கு சிங் ” என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் எனது குடும்பத்தின் பங்கு மிகப்பெரியது . எனது கிரிக்கெட் வாழ்க்கைக்காக அவர்கள் நிறைய தியாகங்களை செய்துள்ளனர் . எனது கிரிக்கெட் தேவைகளுக்கு அவர்களிடம் போதுமான பணம் இல்லாத காலங்களில் எனது தாயார் மற்றவர்களிடமிருந்து கடன் வாங்கி எனக்காக செலவு செய்திருக்கிறார். இந்த விஷயங்கள் எல்லாம் எப்போதும் என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். கிரிக்கெட்டில் மிகப்பெரிய அளவில் சாதித்து அவர்களுடைய கஷ்டங்கள் அனைத்தையும் போக்க வேண்டும் என்பதே எனக்கு மிகப்பெரிய உத்வேகமாக அமைந்தது” எனவும் தெரிவித்தார்.

சர்வதேச போட்டிகளுக்காக எவ்வாறு தயாராகிறார்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த ரிங்கு ” உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடருக்கு தயாராவது போன்று தான் சர்வதேச போட்டிக்கும் தயாராகிறேன். ஆனால் இந்தியாவிற்காக விளையாட வேண்டும் என்ற அழுத்தம் சற்று இருக்கத்தான் செய்கிறது. தாய் நாட்டிற்காக விளையாடுவது மிகப்பெரிய பொறுப்பு என்பதால் அந்த அழுத்தம் இருக்கிறது என தெரிவித்தார். ஐபிஎல் தொடர்களில் விளையாடியது போன்றே என் மனதை அமைதியாக வைத்துக் கொண்டு அணியில் எனக்கு தரப்பட்ட ரோலில் கவனம் செலுத்தினேன் எனக் கூறினார் ரிங்கு சிங்.