ஆர்.சி.பி அணியை அசால்ட் ஆக அடித்து நொறுக்கி மும்பை இன்டியன்ஸ் அபார வெற்றி!

0
1062
WPL

நேற்று முன்தினம் துவங்கி பெண்கள் ஐபிஎல் தொடர் மும்பையில் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. வெளியில் இருந்து யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு, பெண்கள் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாகவும் தரமாகவும் இருக்கிறது!

முதல் போட்டியில் குஜராத் மும்பை அணிகள் மோத, அந்தப் போட்டியில் அபாரமான 143 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற்று, பெண்கள் ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் தங்களது சிறப்பான வெற்றியை பதிவு செய்தது!

- Advertisement -

இதற்கு அடுத்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் போட்டியில் பெங்களூரு அணி டெல்லி அணியிடம் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தனது முதல் ஆட்டத்தில் தோல்வியை கண்ட குஜராத் அணி இரண்டாவது ஆட்டத்தில் உத்தரப்பிரதேச அணியை எதிர்த்து விளையாடியது. பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் கடைசி ஓவரில் உத்தரபிரதேச அணி குஜராத் அணியை வீழ்த்தியது. இதை அடுத்து குஜராத் அணி தனது இரண்டாவது தோல்வியை பதிவு செய்தது.

தங்களது இரண்டாவது ஆட்டத்தில் மும்பை மற்றும் பெங்களூர் அணிகள் எதிர்த்து மோதிக்கொண்டன. இந்தப் போட்டி மும்பையின் பிராபோன் மைதானத்தில் நடைபெற்றது. பெங்களூர் டெல்லிக்கு எதிராக தோல்வியை சந்தித்த அதே மைதானம் அதே ஆடுகளம் என்பது குறிப்பிடத்தக்கது!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்ய வந்தது. மும்பை அணியின் சிறப்பான பந்து வீச்சால் பெங்களூரு அணியில் எந்த ஒரு வீராங்கனையும் 30 ரன்னை எட்டவில்லை. கேப்டன் ஸ்மிருதி மந்தனா உட்பட ஐந்து வீராங்கனைகள் 20க்கும் மேற்பட்ட ரண்களை எடுக்க, 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பெங்களூர் அணி 155 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய மும்பை அணிக்கு துவக்க வீராங்கனை யாஷிகா பாட்டியா 23 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்த விக்கட்டை ஏன் எடுத்தோம் என்று பெங்களூர் அணி வருத்தப்படும் அளவிற்கு அடுத்த ஜோடி சேர்ந்த ஹெலி மேத்யூஸ் மற்றும் சிவிர் பிரண்ட் இருவரும் பெங்களூர் பந்துவீச்சை நொறுக்கி தள்ளிவிட்டனர்.

மிகச் சிறப்பாக விளையாடிய இருவரும் சேர்ந்து 14.2 ஓவரில் இலக்கை எட்டி மும்பை அணியை இரண்டாவது அபார வெற்றியைப் பெற வைத்தனர். ஹெலி மேத்யூஸ் 38 பந்தில் 13 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 77 ரன்களுடனும், சிவிர் பிரண்ட் 29 பந்தில் ஒன்பது பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 55 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்று வெற்றியை உறுதி செய்தனர். இந்த இருவரும் சேர்ந்து 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். பேட்டிங் மட்டுமல்லாது பந்துவீச்சிலும் மூன்று விக்கட்டுகளை கைப்பற்றிய மேத்யூஸ் ஆட்டநாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்!

பெண்கள் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தின் போது வீராங்கனைகளை வாங்கி அணியை உருவாக்கிய விதத்தில் பெங்களூரு அணி மிகப்பெரிய பலம் வாய்ந்ததாக எல்லோராலும் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொடர் ஆரம்பித்து சந்தித்த முதல் இரண்டு போட்டிகளிலும் பெங்களூரு அணி தோல்வியை தழுவி தற்பொழுது பின்னணியில் இருக்கிறது!