மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி தோல்வி; பொல்லார்டு போராட்டம் வீண்!

0
1961
Mlc2023

பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் தொடரின் வெற்றி உலகெங்கும் பல கிரிக்கெட் வாரியங்களை டி20 லீக்குகளை நடத்த வைத்திருக்கிறது. தற்பொழுது கிரிக்கெட்டில் ஒரு சிறிய வளர்ந்து வரும் நாடாக இருக்கும் அமெரிக்காவிற்கும் இப்படியான டி20 லீக் நடத்தும் திட்டம் ஏற்பட்டு, மேஜர் லீக் கிரிக்கெட் என்ற பெயரில் டி20 லீக் ஆரம்பிக்கப்பட்டு சில நாட்களுக்கு முன்பு இருந்து நடந்து வருகிறது!

இந்த அமெரிக்க டி20 லீக் தொடரில் ஐபிஎல் தொடரில் அணிகளை வாங்கி உள்ள சென்னை, கொல்கத்தா, மும்பை மற்றும் டெல்லி ஆகிய நான்கு அணி நிர்வாகங்களும் அணிகளை வாங்கி இருக்கின்றன. மொத்தம் ஆறு அணிகளை கொண்டு நடத்தப்படும் இந்த டி20 லீக் தொடரில் மீதம் 2 அணிகளை அமெரிக்க நிறுவனங்கள் வாங்கியிருக்கின்றன.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் வாங்கியுள்ள டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக பாப் டூ பிளிசஸ் இருக்கிறார்.

இன்று நடைபெற்ற ஒரு போட்டியில் நியூயார்க் மும்பை இந்தியன்ஸ் அணியும், சான் பிரான்சிஸ்கோ யூனிகான்ஸ் அணியும் மோதிக் கொண்டன. இந்த இரு அணிகளுக்கும் பொல்லாடு மற்றும் ஆரோன் பின்ச் இருவரும் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

முதலில் பேட்டிங் செய்த சான் பிரான்சிஸ்கோ யூனிகான்ஸ் அணிக்கு பின் ஆலன், மேத்யூ வேட், ஸ்டாய்னிஸ், ஆரோன் பின்ச் என மொத்தமாக நட்சத்திர சர்வதேச வீரர்கள் ஏமாற்றினார்கள்.

- Advertisement -

ஆனால் இதற்கு அடுத்து களத்திற்கு வந்த நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சன் மற்றும் பாகிஸ்தான் வீரர் சதாப் கான் இருவரும் அதிரடியில் மிரட்டி விட்டார்கள். கோரி ஆண்டர்சன் 52 பந்தில் நான்கு பவுண்டரி மற்றும் ஏழு சிக்ஸர்கள் உடன் 91 ரன்களும், சதாப் கான் 30 பந்துகளில் நான்கு பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்கள் உடன் 61 ரன்களும் எடுக்க, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிதரப்பில் ட்ரெண்ட் போல்ட் மற்றும் ரபடா இருவரும் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.

இதைத்தொடர்ந்து பெரிய இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிக்கு தென்னாபிரிக்காவின் டிவால்ட் பிரிவியஸ் 32, நிக்கோலஸ் பூரன் 40 ரன்கள் எடுத்தார்கள்.

இதற்கு அடுத்து வெற்றியை நோக்கி கேப்டன் பொல்லார்டு மற்றும் ஆஸ்திரேலியாவின் டிம் டேவிட் இருவரும் அதிரடியாக விளையாடி அணியை அழைத்துச் சென்றனர். கேப்டன் பொல்லார்டு 27 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 48 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து இறுதி வரை களத்தில் நின்று விளையாடிய டிம் டேவிட் 28 பந்துகளில் நான்கு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 53 ரன்கள் எடுத்தார். ஆனாலும் இவர்கள் இருவரது போராட்டம் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியின் வெற்றிக்கு போதுமானதாக அமையவில்லை. 20 ஓவர்கள் முடிவில் இந்த அணியால் ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியில் சான் பிரான்சிஸ்கோ யூனிகான்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.