ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரின் 50வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இதில் முதலில் பேட்டிங் செய்து வரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோஹித் சர்மா 14 வருடங்களுக்குப் பிறகு சிறப்பான சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.
மும்பை ராஜஸ்தான் மோதல்
ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி துவக்க ஆட்டக்காரர்களாக மும்பை அணியின் ரோஹித் சர்மா மற்றும் ரியான் ரிக்கல்ட்டன் ஆகியோர் களம் இறங்கி விளையாடினார்கள்.
ஆர்ச்சரின் முதல் ஓவரில் பொறுமை காத்து விளையாடிய இந்த ஜோடி அதற்குப் பின்னர் தனது கியரை மாற்றி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் ரோகித் சர்மா ஒரு முனையில் நிதானம் காட்ட மறுமுனையில் ரிக்கல்டன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 38 பந்துகளில் 7 போர் மற்றும் 3 சிக்சர் என 61 ரன்கள் குவித்த நிலையில் தீக்ஷானாவின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.
14 வருடத்திற்கு பின்
இந்த ஜோடி 11.5 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்கு 116 ரன்கள் குவித்தது. மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை விளையாடிய ரோகித் சர்மா 36 பந்துகளில் 53 ரன்கள் குவித்து சிறப்பான அரை சதம் அடித்தார். இதன் மூலமாக 14 வருடத்திற்கு பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அரை சதம் அடித்து சாதனை படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் 6 போட்டிகளில் 82 ரன்கள் எடுத்த ரோஹித் சர்மா அதற்குப் பிறகு 4 போட்டிகளில் 200 ரன்கள் குவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:2 வருஷமா வலியில் துடித்த என்னை.. லண்டன் அனுப்பி சரிசெய்தது ஆர்சிபிதான்.. நான் நன்றி உள்ளவனா இருக்கணும் – சுயாஸ் சர்மா பேட்டி
இறுதியில் ரோஹித் சர்மா 36 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டரிகளோடு 53 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். தற்போது வரை மும்பை இந்தியன்ஸ் அணி 14 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் குவித்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. 10 போட்டிகளில் விளையாடி ஆறு வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் மும்பை அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று முதல் இடத்திற்கு முன்னேற முயற்சிக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.






