இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி புள்ளி பட்டியலில் தற்போது முதல் இடத்தில் கம்பீரமாக இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் ஆர்சிபி அணியின் சுழற் பந்துவீச்சாளர் சுயாஷ் சர்மா ஆர்சிபி நிர்வாகம் தனக்கு செய்த உதவி குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
வலியால் அவதிப்பட்ட சுயாஷ் சர்மா
நடப்பு ஐபிஎல் தொடரை பொருத்தவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தற்போது சிறப்பான அணியாக இருந்து வருகிறது. இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 7 போட்டிகள் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் நிலையில் அந்த அணியின் முக்கிய சுழற் பந்துவீச்சாளராக சுயாஷ் ஷர்மா இருந்து வருகிறார். எப்போதெல்லாம் அணிக்கு பிரச்சனை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் தனது பந்துவீச்சின் மூலமாக விக்கெட்டுகளை வீழ்த்திக் கொடுத்து அணி வெற்றி பெறுவதில் முக்கிய பங்காற்றி வருகிறார்.
இவர் கடந்த ஆண்டுகளில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்த நிலையில் இவரின் திறமையை கண்டு ஆர்சிபி கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் வாங்கியது. தன் மீது வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாத வகையில் இவரும் தற்போது சிறப்பான முறையில் விளையாடி வருகிறார். இந்த சூழ்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை தான் குடலிறக்க பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததாகவும் பெங்களூர் அணி தான் தன்னை லண்டனுக்கு அனுப்பி சிகிச்சை செய்ய உதவி புரிந்ததாகவும் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
நன்றி உள்ளவனாக இருப்பேன்
இதுகுறித்து அவர் விவாக கூறும்போது ” நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆர்சிபி அணியில் எனக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என்று தெரியும். நான் கடந்த இரண்டு வருடங்களாக பயிற்சி செய்து கொண்டிருந்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வரை நான் ஊசி போட்டு தான் பயிற்சியில் ஈடுபட்டு போட்டிகளில் விளையாடி வந்தேன். ஆர்சிபி அணி தான் என்னை சிகிச்சைக்காக லண்டன் அனுப்பியது.
இதையும் படிங்க:அஸ்வின் சண்ட போட்டார்னு தோனி விளையாட வைக்கலையா.? இந்த முடிவு ரொம்ப தப்பு – ஹர்பஜன்சிங் பேட்டி
அங்கு எனக்கு உதவி செய்ய ஜேம்ஸ் பைப்பி இருந்தார். அவரது குடும்பம் அங்கு என்னை அவர்கள் சொந்த குடும்பம் போலவே நடத்தினார்கள். எனக்கு மூன்று குடல் இறக்கங்கள் இருந்தன. எனவே சிகிச்சை முடிந்த பின்னர் நான் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் விளையாட மாட்டேன் என்றுதான் நினைத்தேன். ஆனால் பெங்களூர் அணிக்காக முதல் போட்டியில் விளையாடுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால் ஜேம்ஸ் என்னை நன்றாக கவனித்துக் கொண்டார். இதற்கு நான் மிகவும் நன்றி உள்ளவனாக இருக்க வேண்டும். இல்லையென்றால் கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே நான் இப்போதும் வலியுடன் தான் விளையாடி இருக்க வேண்டும்” என்று கூறுகிறார்.






